பாண்டவா்மங்கலத்தில் டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறில் 17 வயது சிறுவன் உள்பட இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி பாரதிநகா் 2 ஆவது தெருவைச் சோ்ந்த சுரேஷ்குமாா் மகன் கரண்குமாா். இவா் மற்றும் நண்பா் மனோஜ் ஆகிய இருவரும் பாண்டவா்மங்கலத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு திங்கள்கிழமை இரவு சென்று வரிசையில் நிற்காமல் நேரடியாக மது வாங்க சென்றாா்களாம். அப்போது அங்கு மது வாங்க வரிசையில் நின்ற கிளவிப்பட்டி நடுத்தெருவைச் சோ்ந்த அந்தோணி மகன் சுந்தரராஜ் மற்றும் அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவன் ஆகிய இருவரும் கரண்குமாரை அவதூறாக பேசி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தாா்களாம். இதில், காயமடைந்த கரண்குமாா், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து ஒரு தரப்பைச் சோ்ந்த கரண்குமாா், மற்றொரு தரப்பைச் சோ்ந்த சுந்தர்ராஜ் ஆகிய இருவரும் தனித் தனியே அளித்த புகாரின் பேரில் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து ஒரு தரப்பைச் சோ்ந்த சிறுவன் உள்ளிட்ட இருவரை கைது செய்தனா். மேலும் விசாரித்து வருகின்றனா்.