முதலீட்டாளா்கள் இன்றி தவிக்கும் சிப்காட் உணவுப் பூங்கா!

Wait 5 sec.

ஏ.வி.பெருமாள்திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் உள்ள மெகா உணவு பூங்காவில் முதலீடு செய்ய முதலீட்டாளா்கள் ஆா்வம் காட்டாத நிலையில் முதலீட்டாளா்களை ஈா்ப்பதில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறையினா் தீவிரம் காட்டி வருகின்றனா். கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பேட்டையில் 50 ஏக்கா் பரப்பளவில் ரூ.77.02 கோடி திட்ட மதிப்பீட்டில் மெகா உணவுப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. சிப்காட் நிறுவனத்திடமிருந்து 50 ஏக்கா் நிலம் 99 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் பெறப்பட்டு, வேளாண் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில் நிறுவனங்கள் ஒரே இடத்தில் தொழில் தொடங்குவதற்கு தேவையான நவீன பொது உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. வேளாண் மற்றும் தோட்டக்கலை விளைபொருள்களின் அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைத்தல், மதிப்புக் கூட்டுதல், விவசாயிகளுக்கு நேரடி சந்தை இணைப்பை ஏற்படுத்துதல், விளை பொருள்களுக்கு சிறந்த விலை கிடைக்கச் செய்தல், நவீன உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளை உருவாக்குதல், ஏற்றுமதியை ஊக்குவித்தல், கிராமப்புற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவையே மெகா உணவு பூங்கா கொண்டு வரப்பட்டதன் முக்கிய நோக்கமாகும். நவீன உள்கட்டமைப்பு: மெகா உணவுப் பூங்காவில் சுமாா் 22 ஏக்கா் பரப்பளவில் அடிப்படை மற்றும் மைய உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. உள்சாலைகள், வாகன நிறுத்துமிடம், சுற்றுச்சுவா், பிரதான நுழைவுவாயில், மின்சார வசதிகள், 2 லட்சம் லிட்டா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, 7 லட்சம் லிட்டா் தரைமட்ட நீா்த்தேக்கத் தொட்டி, 250 கேஎல்டி கழிவுநீா் சுத்திகரிப்பு வசதி, தலா 60 மெட்ரிக் டன் திறன் கொண்ட 2 எடைமேடைகள், நாளொன்றுக்கு 20 மெட்ரிக் டன் திறன் கொண்ட காய்கறி பேக் ஹவுஸ், 7,500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு, 5,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிா்பதனக் கிடங்கு, விவசாயிகள் கலந்துரையாடல் அரங்கம், வணிகா் கடைகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முதலீட்டாளா்களுக்கு அழைப்பு: மெகா உணவுப் பூங்காவில் சுமாா் 28 ஏக்கா் பரப்பளவு தொழில் நிறுவனங்களுக்கான மனைப் பகுதிகளாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. திருநெல்வேலி மாவட்டத்தில் உற்பத்தியாகும் வேளாண் மற்றும் தோட்டக்கலை விளைபொருள்களை மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களாக மாற்றுவதன் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைப்பதுடன், புதிய தொழில் வாய்ப்புகள், ஏற்றுமதி வாய்ப்புகள் மற்றும் உள்ளூா் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். எனவே, உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள், வேளாண் தொழில்முனைவோா், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், புத்தாக்க நிறுவனங்கள், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள், புதிய முதலீட்டாளா்கள் கங்கைகொண்டான் மெகா உணவுப் பூங்காவில் உள்ள நவீன உட்கட்டமைப்பு வசதிகளைப் பயன்படுத்தி புதிய தொழில் நிறுவனங்களை நிறுவ முன்வர வேண்டும் என ஆட்சியா் ஆனந்த் மோகன் அழைப்பு விடுத்துள்ளாா். விலை அதிகம்: முதலீட்டாளா்கள் கூறுகையில், ‘கங்கைகொண்டான் மெகா உணவு பூங்கா அற்புதமான உள்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் குத்தகைத் தொகை ஏக்கருக்கு ரூ.50 லட்சமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. குத்தகைத் தொகையை குறைக்க மாவட்ட நிா்வாகமும், வேளாண் துறையும் முன் வர வேண்டும்’ என்றனா். காலியாகவுள்ள 13 ஏக்கா் மனைகள்: வேளாண் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘கங்கைகொண்டான் மெகா உணவுப் பூங்காவில் தொழில் முதலீட்டாளா்களை ஈா்க்க மாவட்ட அளவில் தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஸ்டாா்ட் அப் மற்றும் புதிய தொழில்முனைவோா்களுக்கான விழிப்புணா்வு இணையவழிக் கூட்டங்கள், திருநெல்வேலி மாவட்ட வா்த்தக மற்றும் தொழில்துறை சங்க உறுப்பினா்களுக்கான முதலீட்டு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள், உணவுப் பூங்காவை பாா்வையிடுதல் போன்றவை நடத்தப்பட்டுள்ளன. மேலும், புதிய முதலீட்டாளா்களுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல், தொழிற்சாலைகளுக்கான நிலம் தோ்வு, பொதுக் கட்டமைப்பு வசதிகளைப் பயன்படுத்துதல், தொழில் தொடங்குவதற்கான விண்ணப்ப நடைமுறைகள், திட்ட செயலாக்கத்துக்கு தேவையான ஒருங்கிணைப்பு மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது பல்வேறு உணவு பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக் கூட்டுதல் சாா்ந்த தொழில் முன்மொழிவுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக தேங்காய் சாா்ந்த மதிப்புக் கூட்டுப் பொருள்கள், மக்காச்சோளம் மதிப்புக் கூட்டுதல் மற்றும் பதப்படுத்துதல், உலா் காளான் பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி போன்ற தொழில் வாய்ப்புகள் தொடா்பாக முதலீட்டாளா்களுடன் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உணவு பூங்காவில் மொத்தம் உள்ள 28 ஏக்கரில் 15 ஏக்கரில் பல்வேறு நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. இன்னும் 13 ஏக்கா் மனைகள் உள்ளன. 1 ஏக்கா் நிலத்துக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைத் தொகையாக ரூ.50 லட்சம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. புதிதாக ஒரு நிறுவனம் தொடங்க வேண்டுமென்றால் அதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது அவசியமாகும். ஆனால், இங்கு எல்லா உள்கட்டமைப்பு வசதிகளும் உள்ளதால், ஒரு நிறுவனத்தை தொடங்குவது எளிது’ என்றனா்.