ஆவின் தட்டுப்பாடு! அதிகம் விற்கப்படும் தனியார் பால் விலை உயர்வு!

Wait 5 sec.

தமிழ்நாட்டில், கடந்த ஒரு சில மாதங்களாக ஆவின் பால் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில், அதற்கடுத்து அதிகம் விற்பனையாகும் தனியார் பாலும் லிட்டருக்கு ரூ.4 உயர்த்தப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் ஆவின் பால் விற்பனையை குறைத்து செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி வருவதாக தமிழ்நாடு பால் முகவா்கள் தொழிலாளா்கள் நலச் சங்கம் குற்றச்சாட்டியிருந்த நிலையில், தனியார் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.தனியார் பால் விலை ஒரு லிட்டர் ரூ.82 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது ரூ.86 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆவின் பால் கிடைக்காமல் தனியார் பால் வாங்கும் ஏழை, எளிய மக்கள் இனி அரை லிட்டர் பாலுக்கு ரூ.2 கூடுதலாக செலுத்தும் நிலை ஏற்படும்.இதுபோல, தனியார் நிறுவனத்தின் தயிர் ஒரு லிட்டர் ரூ.88லிருந்து ரூ.90 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது ஏற்கனவே விலைவாசி உயர்வால் அவதிப்படும் மக்களை மேலும் துயருக்குள்ளாக்கும்.முன்னதாக, மாலை நேரம் வரையிலாவது சில கடைகளில் ஆவின் பால் கிடைக்கும். இப்போது காலையிலேயே அனைத்து பாலும் விற்பனையாகிவிடுகிறது. இதனால் தனியார் பால் வாங்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்படுகிறார்கள்.இதுகுறித்து மிழ்நாடு பால் முகவா்கள் தொழிலாளா்கள் நலச் சங்கத்தின் நிறுவனரும், மாநிலத் தலைவருமான சு.ஆ.பொன்னுசாமி வைத்த குற்றச்சாட்டில் ஆவின் பால் கொள்முதல் விலை அண்மையில் உயா்த்தப்பட்டது. ஆனால், விற்பனை விலை உயா்த்தப்படவில்லை. கடந்த 5 ஆண்டு திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட அதே தவறை தற்போதைய அரசும் செய்துள்ளதால், ஆவின் நிறுவனத்துக்கு ஏற்படும் நிதி இழப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், நிதி இழப்பைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஆவின் பால் விற்பனையை குறைக்க நிா்வாகம் வாய்மொழி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறது. இதனால் செயற்கையான பால் தட்டுப்பாடு ஏற்பட்டு, பால் முகவா்களும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனா்.குமரி மாவட்டத்தில் ஆவின் நிறை கொழுப்பு பால் உற்பத்தி மற்றும் விற்பனை முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. ஈரோடு, சேலம், மதுரை, திருச்சி, தஞ்சாவூா், கோவை உள்ளிட்ட மாவட்டங்களிலும் பால் விநியோகம் திட்டமிட்டு பலமடங்கு குறைக்கப்பட்டுள்ளது.சென்னையில் தினமும் ஆவின் பால் விற்பனை 16.5 லட்சம் லிட்டருக்கும் அதிகமாக இருந்த நிலையில், கடந்த 6 மாதங்களில் 25 சதவீதத்துக்கும் மேல் குறைந்துள்ளது. தற்போது மேலும் 10% வரை விற்பனையை குறைக்க வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆவின் கொள்முதல் விலை உயா்வைத் தொடா்ந்து தனியாா் பால் நிறுவனங்களும் விற்பனை விலையை உயா்த்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால் விலை குறைவான ஆவின் பால் பக்கம் பொதுமக்கள் மீண்டும் திரும்பும் சூழல் உருவாகும். எனவே, ஆவின் நிறுவனத்தின் நிதி இழப்பைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களுக்கு தடையின்றி பால் கிடைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.