பருவமழை: நிலச்சரிவு ஏற்படும் இடங்களைக் கண்காணிக்க முதல்வர் விஜய் உத்தரவு!

Wait 5 sec.

வடகிழக்குப் பருவமழையையொட்டி தெற்கு உள்மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:முதல்வர் ச. ஜோசப் விஜய் தலைமையில் இன்று (22.9.2026) தலைமைச் செயலகத்தில், வடகிழக்குப் பருவமழையையொட்டி, தெற்கு உள்மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களான கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர், மதுரை, நீலகிரி, சிவகங்கை, தென்காசி, தேனி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகள் குறித்தும், டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர், வடகிழக்குப் பருவமழைக் காலங்களில் தெற்கு உள்மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் உள்ள அபாயத்திற்கேற்பவும், இடத்திற்கேற்பவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், குறிப்பாக, நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில், கனமழையின் காரணமாக ஏற்படக்கூடிய நிலச்சரிவு, மண் சரிவு, மலைச்சரிவுகளில் நிலையற்ற தன்மை, சாலைகளில் மண் மற்றும் பாறைகள் சரிந்து போக்குவரத்து பாதிப்பு போன்ற அபாயங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்திட வேண்டுமென்று மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அறிவுறுத்தினார். மலைப்பகுதிகளுக்கான சிறப்பு அறிவுறுத்தல்கள்நிலச்சரிவு ஏற்படக்கூடிய அனைத்து இடங்களையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டுமென்றும், குறிப்பாக மலைச்சரிவுகள், சாலை வெட்டுப் பகுதிகள் மற்றும் ஏற்கனவே அபாயம் கண்டறியப்பட்ட இடங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தப்பட வேண்டுமென்றும், கனமழைக்கு முன்னரும், கனமழை பெய்யும் காலங்களிலும் அபாயத்திற்குள்ளாகும் மலைச்சரிவுகள் மற்றும் சாலைப் பகுதிகளை ஆய்வு செய்திட வேண்டுமென்றும், மண் விரிசல், சரிவு, நீர்க்கசிவு உள்ளிட்ட நிலையற்ற தன்மையின் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டார். மேலும், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் கொடைக்கானலில் மேற்கொள்ளப்பட்ட Soil Nailing போன்ற சரிவு உறுதிப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு, நிலச்சரிவு தடுப்பு மற்றும் மலைச்சரிவு உறுதிப்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென்றும், மலைப்பகுதிகளுக்கான முக்கிய சாலைகள் மற்றும் போக்குவரத்து இணைப்புகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டுமென்றும், நிலச்சரிவு அல்லது மண், பாறைகள் மற்றும் கழிவுகள் சரிவதால் சாலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டால், உடனடியாக அகற்றுவதற்கான இயந்திரங்கள், பணியாளர்கள் மற்றும் தேவையான உபகரணங்களை முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திருக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தினார்.அபாயத்திற்குள்ளாகும் மலைப்பகுதிகளில் மீட்பு மற்றும் வெளியேற்ற நடவடிக்கைகளுக்கான பணியாளர்கள் மற்றும் உபகரணங்களை முன்கூட்டியே நிலைநிறுத்த வேண்டுமென்றும், முதல்நிலை மீட்புப் பணியாளர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்குத் தேவையான பயிற்சியளித்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தினார்.மேலும், அபாயம் உள்ள பகுதிகளுக்கு அருகிலுள்ள நிவாரண முகாம்களை ஆய்வுசெய்து, அவை உடனடியாக பயன்படுத்தக்கூடிய நிலையில் இருப்பதை உறுதிசெய்திட வேண்டுமென்றும்,  மலைப்பகுதிகளில் தொலைத்தொடர்பு பாதிக்கப்படும் வாய்ப்புள்ளதால் விஹெச்எப் (VHF) கருவிகள் மற்றும் செயற்கைகோள் போன் (Satellite Phones) செயல்படும் நிலையில் இருப்பதை உறுதிசெய்திட வேண்டுமென்றும், முக்கியமான அபாயப் பகுதிகளில் ஒத்திகை (Mock Drill) மற்றும் வெளியேற்றப் பயிற்சிகளை நடத்தி, அவசர காலத்தில் மேற்கொள்ள வேண்டிய மீட்பு, வெளியேற்றம் மற்றும் சாலைத் தொடர்பை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை உறுதிசெய்திட வேண்டுமென்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உத்தரவிட்டார். மாவட்டத்தின் பருவமழை முன்னறிவிப்பை மட்டும் சார்ந்திருக்காமல், உள்ளூர் அளவில் பதிவாகும் கனமழையையும் குறுகிய காலத்தில் பெய்யும் தீவிர மழையையும் அடிப்படையாகக் கொண்டு உடனடி கள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும் அறிவுறுத்தினார்.நிலச்சரிவு அபாயத்தின் அடிப்படையில் சிறப்புக் கவனம்1973-ஆம் ஆண்டு முதல் பதிவான வரலாற்றுத் தரவுகளின்படி, நீலகிரி மாவட்டத்தில் 490, திண்டுக்கல் மாவட்டத்தில் 257, கோயம்புத்தூர் மாவட்டத்தில் 238 மற்றும் தேனி மாவட்டத்தில் 91 நிலச்சரிவு நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. மேலும், மேற்கொள்ளப்பட்ட அபாய மதிப்பீட்டில் நீலகிரி மாவட்டத்தில் 79 மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் 24 உயர்/மிக உயர் அபாய இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. எனவே, மலைப்பகுதிகளுக்கான பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தனித்துவமான செயல்திட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும், நிலச்சரிவு ஏற்படுவதற்கு முன்னரே அதன் அறிகுறிகளைக் கண்டறிதல், தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், சாலைத் தொடர்பைப் பாதுகாத்தல், தேவையான இடங்களில் மக்களை வெளியேற்றுதல் மற்றும் விரைவான மீட்பு நடவடிக்கைகளை உறுதி செய்தல் ஆகியவற்றில் மாவட்ட நிர்வாகங்கள் சிறப்புக் கவனம் செலுத்திட வேண்டுமென்றும் முதல்வர் அறிவுறுத்தினார்.அதேவேளையில், தென் மாவட்டங்களில் கால்வாய்கள், நீர்வழிகள், கண்மாய்கள், உபரி நீர்வழிகள் மற்றும் மழைநீர் வடிகால் அமைப்புகள் தடையின்றிச் செயல்படுவதை உறுதிசெய்திடவும், அடையாளம் காணப்பட்ட வெள்ள அபாயப் பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், கண்டறியப்பட்ட ஒவ்வொரு அபாய இடத்திற்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குப் பொறுப்பான அலுவலர், தேவையான முன்னேற்பாடுகள் மற்றும் அவசரகால செயல் திட்டம் ஆகியவை மழை தீவிரமடைவதற்கு முன்னரே உறுதிசெய்யப்பட வேண்டுமென்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மழையினால் சேதமடையாமல் இருப்பதைக் கண்காணிக்க வேண்டுமென்றும், மழைக் காலங்களில் தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்களை முன்னதாகவே கண்டறியப்பட்ட முகாம்களில் பாதுகாத்து தயார்நிலையில் வைக்கவும் அறிவுறுத்தினார். டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள்மாவட்டவாரியாக டெங்கு மற்றும் காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் நோய் அதிகரித்துவரும் பகுதிகளைக் கண்டறிவதோடு, கொசுப்புழு ஒழிப்புப் (DBC) பணியாளர்கள்  மூலம் வீடுதோறும் களஆய்வு செய்து, ஏடிஸ் (Aedes) கொசு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிதல் மற்றும் அகற்றுதல், கொசுப்புழு ஒழிப்பு, பொதுமக்கள் விழிப்புணர்வு மற்றும் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் தொடர் கண்காணிப்பு போன்ற பணிகளை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையோடு தொடர்புடைய பிற துறைகளும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டுமென்றும், பொதுமக்களிடையே டெங்கு காய்ச்சலுக்கு உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறவும், கொசு உற்பத்தியைத் தடுக்கும் முறைகளைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த விரிவான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அறிவுறுத்தினார்.  மேலும், டெங்கு காய்ச்சலை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதோடு, உரிய நேரத்தில் சிகிச்சைக்குப் பரிந்துரை செய்தல், திரவ சிகிச்சை வசதிகள், தீவிர டெங்கு நோயாளிகளுக்கான சிகிச்சை, தொடர் மருத்துவக் கண்காணிப்பு உள்ளிட்டவற்றை  மேற்கொள்வதற்கு அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தயார்நிலையில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டுமென்றும் உத்தரவிட்டார்.இக்கூட்டத்தில், எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட துறை சார்ந்த செயலாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  காணொலிக் காட்சி வாயிலாக கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர், மதுரை, நீலகிரி, சிவகங்கை, தென்காசி, தேனி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். Monsoon: Chief Minister Vijay orders monitoring of landslide-prone areasகம்யூனிஸ்ட் வரலாற்றை ஆதவ் அர்ஜுனா படித்து முதல்வருக்கும் சொல்ல வேண்டும்! மு. வீரபாண்டியன்