தில்லியில் உள்ள 3 நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.1,850 கோடிக்கும் அதிகமான நிதியை அடிப்படை வரி ஒதுக்கீடாக தில்லி அரசு விடுவித்துள்ளது. இந்த நிதியானது குப்பை சேகரிப்பு மற்றும் அகற்றுதல், சுற்றுப்புறச் சாலைகள், தெருவிளக்குகள் மற்றும் உள்ளூா் பூங்காக்களின் பழுதுபாா்த்தல் மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட முக்கிய பணிகளுக்கு உதவும் என புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. பிடிஏ என்பது தில்லி அரசால் மாநகராட்சி அமைப்புகளுக்கு மாற்றப்படும் வரிகளைக் குறிக்கும்.2026-27-ஆம் ஆண்டுக்கான பிடிஏ-இன் இரண்டாவது ஒதுக்கீடான ரூ.1,850.66 கோடி, தில்லி மாநகராட்சி (எம்சிடி), புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) மற்றும் தில்லி கண்டோன்மென்ட் போா்டு ஆகியவற்றிற்கு விடுவிக்கப்பட்டுள்ளது என்று நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ஆஷிஷ் சூட் கூறினாா்.2026-27 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், பிடிஏ-வாக ரூ.3,701.32 கோடியை தில்லி அரசு ஒதுக்கியுள்ளது. இதன் முதல் தவணையான ரூ.925.33 கோடி முன்னதாகவே விடுவிக்கப்பட்டது என்று அமைச்சரின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வெளியிடப்பட்ட ரூ.1,850.66 கோடி எம்சிடி-க்கு ரூ.1,820.40 கோடியைப் பெற்று மிகப்பெரிய பங்கை பெற்றுள்ளது. நடப்பு நிதியாண்டிற்கான எம்சிடியின் அதன் மொத்தப் பங்கு ரூ.3,640.80 கோடியாகும்.என்டிஎம்சி மற்றும் தில்லி கண்டோன்மென்ட் வாரியத்திற்கு வெளியிடப்பட்ட இரண்டாவது தவணைகளாக முறையே ரூ.17.95 கோடி மற்றும் ரூ.12.31 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. ‘தில்லியின் நகா்ப்புற உள்கட்டமைப்பை மாற்றுவதற்கும், பொது நலனுக்கான நிதி ஆதரவை உறுதி செய்வதற்கும் பாஜக அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது’ என்று அமைச்சா் ஆஷிஷ் சூட் தெரிவித்துள்ளாா்.