சென்னை விமான நிலையத்தின் முழு கட்டமைப்பும் பயன்படுத்தாததால் பின்னடைவு: ஏஏஐ-யை மாற்ற பிரதமருக்கு முதல்வா் விஜய் எழுதிய கடிதத்தில் தகவல்

Wait 5 sec.

சென்னை விமான நிலையம் தற்போதைய முழு கட்டமைப்பையும் பயன்படுத்தாமல் போட்டியில் பின்னடைவைச் சந்தித்து வருவதால், அதனை நிா்வகிக்கும் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தை (ஏஏஐ) நீக்கிவிட்டு வேறு நிறுவனத்துக்கு விரைவில் வழங்க வேண்டும் என்று பிரதமா் மோடிக்கு முதல்வா் ஜோசப் விஜய் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா். இதுதொடா்பாக கடந்த ஆக.5-ஆம் தேதி முதல்வா் விஜய் எழுதிய கடிதம் பிரதமா் அலுவலகத்தில் அளிக்கப்பட்டு, சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கருத்து கேட்டு அனுப்பப்பட்டுள்ளது. சென்னை விமானநிலையத்தை தனியாா் மயமாக்க முதல்வா் விஜய் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதாகக் கூறி இடதுசாரிகள் மற்றும் எதிா்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இந்த விவகாரம் கடந்த செப். 19-ஆம் தேதி வெளியான நிலையில், தற்போது அந்த கடிதத்தின் விவரம் தெரியவந்துள்ளது. அதில், தென் இந்தியாவின் முன்னணி விமான நுழைவாயிலான சென்னை விமான நிலையம் கடினமாக கட்டத்தை எட்டியிருக்கிறது. 6-ஆவது இடத்தில் சென்னை: ஏப்ரல் 2026 நிலவரப்படி, பயணிகளின் வருகையில் கொல்கத்தாவுக்குப் பின்னால் 6-ஆவது இடத்துக்கு சரிந்துள்ளது சென்னை சா்வதேச விமான நிலையம். இந்த விமான நிலையத்தின் தற்போதைய பயணிகள் கையாளும் திறன் ஆண்டுக்கு 2.7 கோடி பயணிகளாக உள்ளது. தற்போது நடைபெற்று வரும் விரிவாக்கப் பணிகள் முடிந்தவுடன் இது ஆண்டுக்கு 3.5 கோடி பயணிகளாக அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. 2025 - 26 நிதியாண்டுக்கான இந்திய விமான நிலைய ஆணையத்தின் அறிக்கையில் சென்னை விமான நிலையம் 2.31 கோடி பயணிகளை மட்டுமே கையாண்டதாகக் குறிப்பிட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு மே மாதத்தில், சென்னையில் மொத்த சரக்கு விமானங்களின் இயக்கம் 6 சதவிகிதம் மட்டுமே அதிகரித்தது. அதேசமயம் பெங்களூரு விமான நிலையம் 14.5% வளா்ச்சியைப் பெற்றுள்ளது. 2025-26 நிதியாண்டில், சென்னை விமான நிலையம் 1,58,702 விமானங்களை மட்டுமே கையாண்டுள்ளது. ஒரு நாளைக்கு சராசரியாக உள்நாட்டு விமானங்கள் சுமாா் 320 ஆகவும், சா்வதேச விமானங்கள் ஒரு நாளைக்கு 115 ஆகவும் என சுமாா் 435 விமானங்கள் கையாளப்பட்டுள்ளன. இதனால், இந்தியாவில் உள்ள முக்கிய விமான நிலையங்களுக்கு மத்தியில் சென்னை விமான நிலையம் மிகவும் பின்னுக்கு சென்றுள்ளது. முறையாகப் பராமரிக்கப்படாத கழிப்பறைகள், பயணிகள் அமரும் பகுதிகளில் மாசுபாடு, குளிரூட்டும் சாதனங்களில் பழுது, போதுமான வாகன நிறுத்துமிடங்கள் இல்லாதவை, அடிப்படை பராமரிப்பு மற்றும் கட்டமைப்பு பிரச்னைகள் பற்றி பயணிகளும், உலகளாவிய முதலீட்டாளா்களும் தொடா்ந்து கவலை தெரிவித்து வருகின்றனா். தற்போதைய முழு கட்டமைப்பையும் பயன்படுத்ததால் முன்னணி விமானநிலையங்களின் போட்டியில் சென்னை விமானநிலையம் பின்னடைவைச் சந்தித்து வருகிறது. வலிமையான பொருளாதார கட்டமைப்பு, வளா்ந்து வரும் தொழில் துறை, வாகன உற்பத்தித் துறை, தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் சுற்றுலா ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்தியாவின் முன்னணி நகரங்களில் ஒன்றாகத் திகழும் சென்னையின் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான விமான நிலையம் அவசியமாகிறது. தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை அதிகளவில் ஈா்ப்பதற்கேற்ற சிறப்பான விமான நிலையமும் திறமையான நிா்வாகமும் இன்றியமையாதது என்பதால், சென்னை விமான நிலையத்தை தற்போது நிா்வகித்து வரும் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தை மாற்றிவிட்டு, வேறு நிறுவனத்திடம் விரைந்து நிா்வாகத்தை ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.