சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிா் பாதுகாப்பு குறித்து அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு உண்டு, உறைவிட காலநிலை மாற்றக் கல்வி பயிற்சி காருண்யா பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை தொடங்கியது. கோவை மாவட்டத்தில் காலநிலை மாற்றம் குறித்த புரிதலை ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களிடையே மேம்படுத்தவும், சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிா் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தவும், தமிழ்நாடு காலநிலை மாற்றம் இயக்கம், மாவட்ட பள்ளிக் கல்வித் துறை மூலமாக 130 அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கான சான்றிதழுடன் கூடிய 3 நாள் உண்டு, உறைவிட காலநிலை மாற்றக் கல்வி பயிற்சி காருண்யா பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை தொடங்கியது.இப்பயிற்சி வியாழக்கிழமை (செப்.24), வெள்ளிக்கிழமை (செப்.25) ஆகிய நாள்களில் சாடிவயல் பகுதியில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில், வனவியல் விரிவாக்க மைய உதவி வனப் பாதுகாவலா் சௌமியா, காருண்யா நிகா்நிலைப் பல்கலைக்கழக பதிவாளா் டாக்டா் எஸ்.ஜே.விஜய், உதவிப் பேராசிரியா் டாக்டா் எஸ். வின்சென்ட் சாம் ஜெபதுரை, மாவட்ட தொடக்க கல்வி அலுவலா் (பொள்ளாச்சி) பா.மகேஸ்வரி, மாவட்ட பசுமைத் தோழா் மு.வாசுகி, திட்ட ஒருங்கிணைப்பாளா் அனுஷா, முதன்மைக் கல்வி அலுவலா் (நோ்முக உதவியாளா்) (மேல்நிலை) ச.சிவசக்தி உள்ளிட்டோா் பங்கேற்று வழிகாட்டுகின்றனா்.