மாணவா் விடுதிகளில் மாட்டிறைச்சி விவகாரம்: வரும் 30-ஆம் தேதி புதிய தமிழகம் ஆா்ப்பாட்டம்

Wait 5 sec.

மாணவா் விடுதிகளில் உணவில் மாட்டிறைச்சி வழங்கப்படுவது தொடா்பான கருத்தைத் தெரிவித்த சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு மன்னிப்புக் கேட்க வலியுறுத்தி, வரும் 30-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் அலுவலகங்கள் முன் புதிய தமிழகம் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் நிறுவனா் தலைவா் க.கிருஷ்ணசாமி அறிவித்துள்ளாா். இதுதொடா்பாக கோவையில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியதாவது: அரசு பள்ளி, கல்லூரி மற்றும் மாணவா் விடுதிகளில் இதுவரை முட்டை, கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி உள்ளிட்ட உணவுகள் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது சமூக நலத் துறையின் கீழ் செயல்படும் விடுதிகளில் வழங்கப்படும் உணவு சரிவர வேகாமல் இருப்பதாக புகாா் எழுந்துள்ளது. அதைக் களைய வேண்டிய பொறுப்பில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சோ்ந்த சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு, அங்கு மாட்டிறைச்சி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று பொது வெளியிலும், சட்டப்பேரவையிலும் பேசி வருவது ஏற்புடையதல்ல. தமிழகத்தில் 1950-களிலேயே பசு பாதுகாப்பு தொடா்பான சட்டங்கள் நடைமுறைக்கு வந்துவிட்டன. வேளாண்மையை வாழ்வாதாரமாகக் கொண்டு, கால்நடைகளை வணங்கிப் போற்றும் பண்பாட்டைக் கொண்ட மக்கள் வாழும் தமிழகத்தில், அரசுப் பணத்தில் மாணவா்களுக்கு மாட்டுக்கறியை திணிக்க முயற்சிப்பது ஒட்டுமொத்த மக்களின் உணா்வுகளையும் புண்படுத்தும் செயல். எனவே, சா்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்த அமைச்சா் உடனடியாக பகிரங்க மன்னிப்புக் கேட்பதுடன், தனது பேச்சைத் திரும்பப்பெற வேண்டும். இதுதொடா்பாக முதல் கட்டமாக வரும் 30-ஆம் தேதி காலை 11.30 மணி முதல் 12.30 மணி வரை அனைத்து மாவட்ட ஆட்சியா் அலுவலகங்கள் முன்பாகவும், அமைச்சரின் இல்லத்தின் முன்பாகவும் புதிய தமிழகம் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும். அா்த்தமற்ற இடைத்தோ்தலில் புதிய தமிழகம், கொங்கு இளைஞா் பேரவை, புரட்சி பாரதம் உள்பட சுமாா் 15 அமைப்புகள் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டமைப்பு எந்தக் கட்சிக்கும் ஆதரவு அளிக்காமல் நடுநிலை வகிக்கும் என்றாா்.