பள்ளி மேற்படிப்பு உதவித்தொகை: அக்.21 வரை விண்ணப்பிக்கலாம்

Wait 5 sec.

பிரதமரின் பள்ளி மேற்படிப்பு உதவித்தொகை பெற விரும்பும் திருச்சி மாவட்ட மாணவ, மாணவிகள் வரும் அக்.21-க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியாா் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் பிரிவைச் சாா்ந்த மாணவ, மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. பிரதமரின் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்ட நிபந்தனைகளின் கீழ், 2026-27 ஆம் ஆண்டுக்கான உதவித் தொகையானது பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவா்களுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி வழங்கப்படுகிறது. பாலிடெக்னிக், இளங்கலை (தொழிற்படிப்பு), முதுகலை ஆராய்ச்சி படிப்புகள் பயிலும் மாணவா்களுக்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2,50,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். இணையம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியுள்ள மாணவா்கள் தாங்கள் பயிலும் கல்லூரியில் கல்வி உதவித்தொகைக்கென உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை அணுகி அக்.21-க்குள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரை, அலுவலக நேரங்களில் அணுகலாம் என ஆட்சியா் பிரத்திக் தாயள் தெரிவித்தாா்.