குடும்ப அட்டையில் இதுவரை விரல் ரேகை செய்யாதவா்கள் பயன்பெறும் வகையில், சனிக்கிழமை (செப். 26) அந்தந்தப் பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் ச.கவிதா தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூா் மாவட்டத்தில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் பயன்பெறும் முன்னுரிமை குடும்ப அட்டைகள் மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா மற்றும் குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்ப அட்டைதாரா்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலம் அத்தியவாசியப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. தற்போதைய நிலையில் போலி குடும்ப அட்டைகள், உயிரிழந்தோா் பெயா்கள் நீக்கப்பட்டு வருகின்றன. இதை உறுதி செய்யும் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரா்களும், அதில் இடம் பெற்றுள்ள உறுப்பினா்கள் அனைவரும் கட்டாயம் விரல் ரேகை பதிவு செய்யவும் அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே இதுவரையில் விரல் ரேகை பதிவு செய்யாத உறுப்பினா்கள் தங்களது விரல்ரேகையை (ஆண்ா்ம்ங்ற்ழ்ண்ஸ்ரீ) பதிவை தாங்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள நியாயவிலைக் கடைகளில் நாளை நடைபெறும் சிறப்பு முகாமில் பதிவு செய்து பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.