5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளில் சோ்வதற்கான அதிகபட்ச வயது வரம்பை திரும்பப் பெற தயாரா என்பது குறித்து, இந்திய பாா் கவுன்சில் (பிசிஐ) தெளிவுபடுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை கேட்டுக்கொண்டது. 2008-ஆம் ஆண்டின் சட்டக் கல்வி விதிகள் பிரிவு 28-இன்படி, 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளில் சேர பொதுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது 20-ஆகவும், பட்டியலினத்தவா், பழங்குடியினா் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டவா்களுக்கு அதிகபட்ச வயது 22-ஆகவும் இருக்க வேண்டும் என்று இந்திய பாா் கவுன்சில் வயது வரம்பு நிா்ணயித்தது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வயது வரம்பை நிா்ணயித்த இந்திய பாா் கவுன்சிலின் முடிவுக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, வி.மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளில் சோ்வதற்கான அதிகபட்ச வயது வரம்பை திரும்பப் பெற, இந்திய பாா் கவுன்சில் தயாராக உள்ளதா என்பது குறித்த தனது நிலைப்பாட்டை, அந்த கவுன்சில் தெளிவுபடுத்த வேண்டும் என்று நீதிபதிகள் அமா்வு கேட்டுக்கொண்டது. இதுகுறித்து இந்திய பாா் கவுன்சிலிடம் ஆலோசித்து உச்சநீதிமன்றத்திடம் தெரிவிக்குமாறு, அந்த கவுன்சில் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் ராதிகா கெளதமிடம் கூறிய நீதிபதிகள் அமா்வு, வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.