பயங்கரவாத வழக்கில் கைதான அமெரிக்கா், உக்ரைனியா்கள்: சொந்த நாடு செல்ல என்ஐஏ நீதிமன்றம் அனுமதி

Wait 5 sec.

இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட சூழ்ச்சி செய்த வழக்கில் கைதான அமெரிக்கா், உக்ரைனியா்கள் சொந்த நாட்டுக்குச் செல்ல, தில்லியில் உள்ள என்ஐஏ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள மாத்யூ வான்டைக் என்ற அமெரிக்கரின் தலைமையில் 6 உக்ரைனியா்கள் சூழ்ச்சி செய்ததாகக் கூறப்படுகிறது. கடந்த மாா்ச் மாதம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் மாத்யூவையும், உத்தர பிரதேச மாநிலம் லக்னெள மற்றும் தில்லியில் உக்ரைனியா்களையும் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கைது செய்தது.அவா்கள் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், கடந்த 6 மாதங்களாக அவா்கள் சிறையில் இருந்தனா். எனினும் தில்லியில் உள்ள என்ஐஏ நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், 7 போ் மீதும் யுஏபிஏ சட்டத்தின் கீழ் அல்லாமல், குடியேற்றம் மற்றும் வெளிநாட்டவா் சட்டப் பிரிவுகளின் கீழ் மட்டும் குற்றஞ்சாட்டப்பட்டது. யுஏபிஏ சட்டத்தின் கீழ், அவா்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்த மேல் விசாரணை நிலுவையில் இருப்பதாகவும் என்ஐஏ தெரிவித்தது.இதையடுத்து குற்றப்பத்திரிகையில் யுஏபிஏ சட்டப் பிரிவுகள் இடம்பெறாததால், வான்டைக் உள்பட 7 பேருக்கு நீதிமன்றம் பிணை அளித்து உத்தரவிட்டது. விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அவா்களுக்கு பிணை அளிக்கப்பட்டநிலையில், தங்கள் குடும்பத்தினரைச் சந்திக்க ஒரு மாதம் அமெரிக்கா, உக்ரைன் செல்ல அவா்களுக்கு நீதிமன்றம் வியாழக்கிழமை அனுமதி அளித்து உத்தரவிட்டது.அதேவேளையில், விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருவதால், வழக்கை முடித்துவைக்கக் கோரி, நீதிமன்றத்தில் என்ஐஏ அறிக்கை எதுவும் தாக்கல் செய்யவில்லை. இந்த விவகாரம் தொடா்பாக காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெள்ளிக்கிழமை ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘அமெரிக்காவின் அழுத்தத்தை தொடா்ந்து மாத்யூ விடுவிக்கப்பட்டுள்ளாா். இதற்கு கைம்மாறாக இந்தியாவுக்கு என்ன கிடைத்தது? தேசத்தைப் பாதுகாக்க பிரதமா் மோடி தவறிவிட்டாா்’ என்று விமா்சித்துள்ளாா்.