சென்னையில் சொத்து வரி, தொழில் நிறுவன பணியாளா்கள் வரி செலுத்துவதற்காக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (செப். 26, 27) ஆகிய இரு நாள்கள் பொது வரி வசூல் மையங்கள் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சொத்து வரி செலுத்துவோா் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், பொதுத் துறை நிறுவனங்கள், தனியாா் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களைச் சாா்ந்த பணியாளா்களின் தொழில் வரிகள் ஆகியவற்றை செப். 30-ஆம் தேதிக்குள் மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டும். இதனால், வரி செலுத்துவோரின் சிரமத்தைக் குறைக்கும் வகையில் சொத்து வரி, தொழில் வரி, நிறுவன வரி மற்றும் வரியில்லா இனங்கள் ஆகியவற்றுக்கான கட்டணங்களைச் செலுத்துவதற்கு ஏதுவாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (செப். 26, 27) மாநகராட்சியின் மண்டல அலுவலகங்கள், ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள வருவாய்த் துறை தலைமையிட பொது வரி வசூல் மையம் ஆகியவை செயல்படும். மாநராட்சி இணையதளம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வாட்ஸ்ஆப் எண் மூலமும் வரி இனங்களைச் செலுத்தலாம். மேலும், 044-25619305 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.