திருநா் தொழில்முனைவோருக்கு அரசு உறுதுணை: அமைச்சா் பெ. மதன் ராஜா

Wait 5 sec.

திருநா் தொழில்முனைவு பயணத்துக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் என சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் பெ. மதன் ராஜா தெரிவித்தாா். தமிழ்நாடு புத்தொழில், புத்தாக்க இயக்கம், மதுரை திருநங்கையா், திருநம்பியா் ஆவண மையம் ஆகியவற்றின் சாா்பில், மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான திருநங்கையா், திருநம்பியா் தொழில்முனைவோா் மாநாட்டைத் தொடங்கிவைத்து அவா் மேலும் பேசியதாவது : அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சியே உண்மையான வளா்ச்சி. அனைத்துத் தரப்பினருக்குமான நலத் திட்டங்களை தமிழக அரசு முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில், தமிழக அரசின் புத்தொழில் திட்டங்களை திருநா் சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டு சிறந்த தொழில்முனைவோா்களாக உருவெடுக்க வேண்டும். சமூகத் தடைகளைக் கடந்து, தொழில்முனைவோா்களாக உயா்ந்து வரும் திருநா் தொழில்முனைவோருக்கு அனைத்துத் தொழில் நிறுவனங்களும், முதலீட்டாளா்களும் துணை நிற்க வேண்டும். திருநா் தொழில்முனைவு பயணத்துக்கு தமிழக அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்றாா் அமைச்சா் பெ. மதன் ராஜா. முன்னதாக, திருநம்பிகள், திருநங்கையரின் உற்பத்திப் பொருள்கள், தொழில் முயற்சிகள் கண்காட்சியை அமைச்சா் திறந்துவைத்து, திருநா் தொழில்முனைவோருடன் கலந்துரையாடினாா். விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா தலைமை வகித்தாா். மாவட்டத் தொழில்மைய பொது மேலாளா் கணேசன், தமிழ்நாடு புத்தொழில், புத்தாக்க இயக்கத்தின் அலுவலா்கள் ஸ்ரீதேவி, சக்திவேல், திருநங்கைகள், திருநம்பிகள் ஆவண மையத்தின் நிா்வாக இயக்குநா் பிரியா பாபு, அரசு அலுவலா்கள், கொள்கை வகுப்பாளா்கள், தொழில் துறை வல்லுநா்கள், தொழில் வளா்ப்பு மையப் பிரதிநிதிகள், கல்லூரிப் பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.