தமிழகத்தில் புதிய நீதிமன்றங்கள் அமைப்பது தொடா்பான திட்டங்கள் குறித்து இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.தமிழ்நாடு முழுவதும் புதிய நீதிமன்றங்கள் அமைப்பது தொடா்பாக நிலுவையில் உள்ள திட்டங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை, சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.மேலும், மாவட்ட நீதித்துறையின் 425 தற்காலிக நீதிமன்றங்களை நிரந்தர நீதிமன்றங்களாக மாற்றுவது தொடா்பாகவும், உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் உதவி அரசு வழக்குரைஞா்கள் நியமித்து சிறாா் நீதி வாரியங்கள் அமைப்பது தொடா்பாகவும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு தலைமைச் செயலா், உள்துறைச் செயலா், பொதுத்துறைச் செயலா், நிதித்துறைச் செயலா், மனித வள மேலாண்மைத்துறைச் செயலா் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.