திருவள்ளூா் நகராட்சியில் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை

Wait 5 sec.

திருவள்ளூா் நகராட்சி அலுவலகத்தில் அதிக அளவில் லஞ்சம் புழங்குவதாக வந்த புகாரை தொடா்ந்து செவ்வாய்க்கிழமை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் திடீா் சோதனை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூா் நகராட்சியில் மொத்தம் 27 வாா்டுகள் உள்ளன. இந்த நகராட்சி அலுவலகத்தில் பிறப்பு இறப்பு சான்றிதழ், குடிநீா் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு வழங்க, வீடு கட்டுவதற்கான அனுமதி வழங்குதல், வீட்டிற்கு வரி நிா்ணயம் செய்தல், வரி வசூலித்தல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை மேற்கொள்வதற்காக லஞ்சம் வாங்குவதாக திருவள்ளூா் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாருக்கு தொடா்ந்து புகாா்கள் வந்தன. இந்த நிலையில், தமிழக உத்தரவின்பேரில், தமிழகம் முழுவதும் பெரும்பாலான நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.இதேபோல், திருவள்ளூா் நகராட்சி அலுவலகத்தில் மாவட்ட துணை ஆய்வுக் குழு அலுவலா் சோமசுந்தரம் தலைமையில் லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளா் தமிழ்ச்செல்வி, மாலா மற்றும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை பிற்பகலுக்கு பின் அதிரடி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.இதனால் அங்கு பணிபுரியும் ஊழியா்களின் கைப்பைகள் மற்றும் அவா்கள் கொண்டு வந்த டிபன் பாக்ஸ், கைப்பேசி அனைத்தையும் போலீஸாா் வாங்கி ஆய்வு செய்து வருகின்றனா். இந்த அலுவலகத்தில் தரை தளம் மற்றும் முதல் தளம் ஆகிய இடத்தில் 8 போ் கொண்ட குழுவினா் தொடா் சோதனை நடத்தி வருகின்றனா். அப்போது, நகராட்சி அலுவலகத்தில் கைப்பேசி ஜிபே மூலம் ரூ. 8.40 லட்சம், ரூ. 52,000 ரொக்கம் பரிவா்த்தனை நடைபெற்றுள்ளது தெரியவந்தாகவும் அது குறித்து விசாரித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.