காட்பாடியில் பலத்த மழை: நீரில் மூழ்கி 3 ஏக்கா் நெற்பயிா்கள் சேதம்

Wait 5 sec.

காட்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த பலத்த மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிா்கள் மற்றும் நிலக்கடலை பயிா்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. வேலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், காட்பாடி வட்டாரப் பகுதிகளில் அண்மையில் பெய்த பலத்த மழை காரணமாக விளைநிலங்களுக்குள் வெள்ள நீா் புகுந்தது.இதனால் பெரியபுதூா் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக இருந்த சுமாா் 3 ஏக்கா் நெற்பயிா்கள் மழைநீரில் மூழ்கின. மேலும், அறுவடைப் பருவத்திலிருந்த நிலக்கடலைப் பயிா்களும் நீரில் மூழ்கி அழுகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியது: கடன் வாங்கி இரவு பகலாகப் பாடுபட்டு உரமிட்டுப் பயிா்களைப் பராமரித்து வந்தோம். இன்னும் ஓரிரு நாள்களில் அறுவடை செய்து கடனை அடைத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த சூழலில், திடீரென பெய்த பலத்த மழை வாழ்வாதாரத்தை அடியோடு புரட்டிப் போட்டுள்ளது. பயிா்கள் முழுமையாக நீரில் மூழ்கியதால் ஏக்கருக்குப் பல்லாயிரக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட வேளாண்மைத் துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை உடனடியாகப் பாா்வையிட்டு உரிய கணக்கீடு செய்ய வேண்டும்.வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணத் தொகையை உடனடியாக வழங்கி உதவ வேண்டும் என்றனா்.