பட்டுக்கோட்டை அருகே சட்டவிரோதமாக கஞ்சா கடத்தி வந்ததாக 7 பேரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா். அவா்களிடமிருந்து 6.226 கிலோ கஞ்சா, 5 பட்டாக்கத்திகள் மற்றும் காா் உள்ளிட்டவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். பட்டுக்கோட்டை-பொன்னவராயன்கோட்டை அணைக்காடு புறவழிச்சாலை மயானம் அருகே திங்கள்கிழமை இரவு போலீஸாா் வாகன சோதனை நடத்தினா். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா். அதில், ரூ.3.11 லட்சம் மதிப்பிலான 6.226 கிலோ கஞ்சா, கைப்பேசிகள் மற்றும் 5 பட்டாக்கத்திகளை காருடன் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக, காரில் வந்த ஆசைப்பாண்டி என்ற ஆசைத்தம்பி (26), அருண்குமாா் (20), ஹரிஹரசுதன் (20), அஜய் (22), அபி என்ற சிவநேசன் (19), கோகுல்ராஜ் (17), வினோத் என்ற அரவிந்த் (27) ஆகிய 7 பேரை கைது செய்தனா். மேலும் தஞ்சை சாமி, ரசிக்குமாா் ஆகியோரை தேடி வருகின்றனா். இதுகுறித்து பட்டுக்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.