உ.பி., ம.பி., பிகார், ராஜஸ்தான் ஆண்களுக்கு வேலை இல்லை: பெங்களூரு சிஇஓ பதிவு வைரல்!

Wait 5 sec.

தனது நிறுவனத்தில் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பிகார், ராஜஸ்தானை சேர்ந்த ஆண்கள் பணியமர்த்தப்பட மாட்டார்கள் என பெங்களூருவைச் சேர்ந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி தெரிவித்துள்ளார். நிறுவனத்திற்குள் நடந்த நீண்ட விவாதத்திற்குப் பிறகும் வாக்குவாதங்களுக்குப் பிறகும் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். பெங்களூருவைச் சேர்ந்த ஏ1 ஸ்போர்ட்ஸ் வேர்டு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கார்த்திக் ஷெனாய். இவர் தனது நிறுவனத்தில் கடைபிடிக்கப்படவுள்ள பணியமர்த்தும் கொள்கைகள் குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். எக்ஸ் தளப் பக்கத்தில் கார்த்திக் ஷெனாய் பதிவிட்டுள்ளதாவது:''இதனை அறிவிப்பதற்காக வருந்துகிறேன்; ஆனால் நீண்ட விவாதம் மற்றும் வாக்குவாதத்திற்குப் பிறகு, இன்று நாங்கள் இதை மிகத் தெளிவாகத் தெரிவித்துக்கொள்கிறோம். வட இந்தியாவில் இந்த 4 மாநிலங்களில் இருந்து வரும் ஆண்களை நாங்கள் பணிக்கு எடுத்துக்கொள்ளப்போவதில்லை. உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பிகார். எங்களுடன் ஏற்கெனவே ஒரு ராஜஸ்தானி பணிபுரிந்து வருகிறார். அவர் இந்த முடிவுக்கு 100% ஒப்புதல் தெரிவித்துள்ளார்'' எனப் பதிவிட்டுள்ளார். தலைமைச் செயல் அதிகாரியின் இந்தப் பதிவுக்கு பல்வேறு தரப்பினர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்த நான்கு மாநிலங்களில் உள்ள ஆண்களை பொதுமைப்படுத்தும் வகையில் இப்பதிவு உள்ளதாகப் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த மாநிலங்களைச் சேர்ந்த பலர் பல முன்னணி நிறுவனங்களில் பணிபுரிந்து வருவதாகவும், இத்தகைய பொதுமைப்படுத்துதலுக்கு எதிராக அவர்கள் குரல் கொடுக்க வேண்டும் எனவும் பலர் பதிவிட்டு வருகின்றனர். எக்ஸ் பதிவுBengaluru CEO bans male hires from UP, Rajasthan, Bihar, Madhya Pradesh