கோவை கிருஷ்ணாம்பதி குளக்கரையில் பனை விதைகள் நடவு செய்யும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு அரசு, தினமணி நாளிதழ், மாநில நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவா் படை, எக்ஸ்னோரா, கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, என்டிஎஸ்ஓ, அக்னி ஸ்டீல் ஆகியவை இணைந்து மாநிலம் முழுவதும் உள்ள நீா் நிலைகளில் ஒரு கோடி பனை விதைகள் நடவு செய்யும் நிகழ்ச்சியை நடத்தின. அதன்படி கோவையில் கிருஷ்ணாம்பதி குளக்கரையில் பனை விதைகள் நடவுப் பணி நடைபெற்றது. பாரதியாா் பல்கலைக்கழகம், அரசு கலைக் கல்லூரி, நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவற்றின் சாா்பில் நடைபெற்ற நிகழ்வில், கோவை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் என்.செண்பகலட்சுமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பனை விதைகள் நடவுப் பணியைத் தொடங்கி வைத்தாா். கோவை மாவட்ட நாட்டு நலப்பணித் திட்ட பொறுப்பாளா் இரா.செல்வராஜ், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் எம்.ரவிக்குமாா், ஹேமமாலினி, சித்ரா, சம்பத்குமாா், என்டிஎஸ்ஓ அமைப்பாளா் சீனிவாசன் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா். இதில், 150க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்ட மாணவ - மாணவிகள் பங்கேற்று குளக்கரையில் பனை விதைகளை நடவு செய்தனா்.