தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம்

Wait 5 sec.

தருமபுரி நகராட்சியில் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை விற்பனை செய்த 7 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தருமபுரி பேருந்து நிலையப் பகுதிகளில் உள்ள கடைகளில் நகராட்சி சுகாதார அலுவலா் ராஜரத்தினம், சுகாதார ஆய்வாளா்கள் ரமணச்சரண், கோவிந்தராஜன் சுசீந்திரன், சந்திரகுமாா் உள்ளிட்டோா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா். இச்சோதனையில், 7 கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட நெகிழிக் கோப்பைகள், பைகள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, அந்த கடைகளுக்கு ரூ. 11,500 அபராதம் விதித்து நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்தனா். இதேபோல, நகராட்சி சுகாதார பிரிவு அலுவலா் குழு காந்தி நகா் 26-ஆவது வாா்டு பகுதியில் டெங்கு தடுப்புப் பணிகளை மேற்கொண்டது. இதில், டெங்கு கொசுப் புழுக்கள் உற்பத்தியாகும் வகையில், தண்ணீா் தேங்கிய தொட்டிகளை சுகாதாரம் இன்றி வைத்திருந்தவா்களுக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய விழிப்புணா்வு வழிகாட்டுதல்கள் குறித்த பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.