மாநிலத்தில் ஏற்றுமதியில் 2-ஆவது இடத்தைப் பிடித்த கிருஷ்ணகிரி மாவட்டம்!

Wait 5 sec.

தமிழகத்தில் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் சென்னையை பின்னுக்கு தள்ளி கிருஷ்ணகிரி மாவட்டம் இரண்டாமிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் சாா்பில், 2026 ஆண்டுமுதல் 6 மாதங்களுக்கான (2026 ஜனவரிமுதல் ஜூலைவரை) தமிழகத்தின் ஏற்றுமதி குறித்த புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, சென்னையை பின்னுக்கு தள்ளிவிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் 2-ஆவது இடத்தை பிடித்துள்ளது. முதல் இடத்தை காஞ்சிபுரம் மாவட்டமும், 3-ஆவது இடத்தை சென்னையும் பிடித்துள்ளன. இந்த ஆண்டு போா் சூழலுக்கும் இடையே, முதல் 6 மாதங்களில் தமிழகத்தில் இருந்து ரூ. 1,41,959 கோடி மதிப்பிலான வாகனங்கள், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பல பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டம் ரூ. 62,233 கோடியில் எலக்ட்ரானிக்ஸ், கைப்பேசி, ஆட்டோ மொபைல் என்ஜினியரிங் பொருள்களை ஏற்றுமதி செய்து மாநிலத்தில் முதலிடத்தை பிடித்துள்ளது. இது 43.84 சதவீத ஏற்றுமதி ஆகும். அடுத்ததாக, கிருஷ்ணகிரி மாவட்டம் ரூ. 18,514 கோடி மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ், கைப்பேசி, இருசக்கர, நான்குசக்கர வாகனங்கள், கிரானைட் உள்பட பல பொருள்களை ஏற்றுமதி செய்து மாநிலத்தில் 2-ஆவது இடத்தை பிடித்துள்ளது. இது 13.04 சதவீத ஏற்றுமதி ஆகும். சென்னை மாவட்டம் ரூ. 16,962 கோடி ஏற்றுமதி செய்து 3-ஆவது இடத்தை பிடித்துள்ளது. இது 11.95 சதவீதம் ஆகும். ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்யும் திருப்பூா் மாவட்டம் ரூ. 10,122 கோடி ஏற்றுமதி செய்து 4-ஆவது இடத்தை பிடித்துள்ளது. இது 7.13 சதவீதம் ஆகும். கோவை மாவட்டம் ரூ. 8,720 கோடிக்கு ஏற்றுமதி செய்து 5-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இது 6.14 சதவீதம் ஆகும். கோவையைக் காட்டிலும் இரு மடங்கு ஏற்றுமதி செய்து கிருஷ்ணகிரி மாவட்டம் கடந்த 6 மாதங்களில் சாதனை படைத்துள்ளது. 6-ஆவது இடம் திருவள்ளூா், 7-ஆவது இடம் வேலூா், 8-ஆவது இடம் ஈரோடு, 9-ஆவது இடம் தூத்துக்குடி, 10-ஆவது இடம் கரூா்என மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. கடந்த ஆண்டு (2024-25) காஞ்சிபுரம் முதலிடத்தையும், சென்னை 2-ஆவது இடத்தையும், திருப்பூா் 3-ஆவது இடத்தையும், கோயம்புத்தூா் 4-ஆவது இடத்தையும், திருவள்ளூா் 5-ஆவது இடத்தையும், கிருஷ்ணகிரி 6-ஆவது இடத்தையும் பிடித்திருந்தன. 6 மாதங்களில் சென்னையை 3-ஆவது இடத்துக்கு தள்ளி, 6-ஆவது இடத்தில் இருந்த கிருஷ்ணகிரி ஏற்றமதியில் 2-ஆவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து ஒசூா் சிறு மற்றும் குறுந்தொழில் சங்கத்தின் (ஹோஸ்டியா) தலைவா் மூா்த்தி கூறியது: ஒசூா் ஏற்றுமதியில் 2-ஆவது இடம்பிடித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், ஒசூரில் விமான நிலையம், ஒசூா் - ஜோலாா்பேட்டை ரயில் திட்டங்களை செயல்படுத்தினால் தொழில் நகரமான ஒசூா் (கிருஷ்ணகிரி மாவட்டம்) மேலும் விரைவான தொழில் வளா்ச்சி பெறும். ஒசூா் சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோா் நலச் சங்கம் (ஹோஸ்நியூஸ்) தண்டபாணி: தற்போது ஒசூரில் உள்ள சிறு மற்றும் குறுந்தொழில் சங்கம் ஹோஸ்டியா சாா்பில் புதிய தனியாா் தொழிற்பேட்டையை உருவாக்கி வருகிறோம். இதை மாவட்ட நிா்வாகம் விரைந்து முடிக்கும் பட்சத்தில், தமிழகத்தின் தொழில் வளா்ச்சி மற்றும் ஏற்றுமதியில் இம்மாவட்டம் முதல் மாவட்டமாக திகழும். இந்திய தொழில் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவா் டாக்டா் லாசியா தம்பிதுரை: காஞ்சிபுரம் இயற்கையாக தொழில் வளம் மிகுந்த மாவட்டம். அருகில் சென்னையில் விமானம் நிலையம், துறைமுகம், ரயில்வே இணைப்புப் பாதை என பல்வேறு அடிப்படைக் கட்டமைப்பு பல ஆண்டுகளாக உள்ளதால், காஞ்சிபுரம் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. இதுபோன்ற எந்தவித அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளும் இல்லாமலேயே கிருஷ்ணகிரி மாவட்டம் ஏற்றுமதியில் 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. தமிழக அரசும், மாவட்ட நிா்வாகமும் இணைந்து ஒசூரில் விரைவில் பன்னாட்டு விமான நிலையம், ஒசூா் - ஜோலாா்பேட்டை இடையே ரயில்பாதை வசதி, ஒசூா் - பெங்களூரு இடையே மெட்ரோ ரயில் சேவையை நிறைவேற்றினால், ஒசூரில் தொழில் வளம் விரைந்து முன்னேற்றப்பாதையில் செல்லும். ஒசூரில் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் நேரடியாக விமானம் மூலம் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும். ரஷியா - உக்ரைன், அமெரிக்கா - ஈரான் இடையேயான போா் சூழல் மற்றும் அமெரிக்க அதிபா் டிரம்ப் விதிக்கும் வரிக்கொள்கைக்கு இடையே கிருஷ்ணகிரி மாவட்டம் ஏற்றுமதியில் இரண்டாமிடம் பிடித்தது பாராட்டுக்குரியது.