நெசவாளா்கள் ஒப்பாரி போராட்டம்

Wait 5 sec.

ராஜபாளையம் அருகே கூலி உயா்வு, நிவாரணம் கேட்டு நெசவாளா்கள் வியாழக்கிழமை ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபட்டனா். விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள புனல்வேலி, முத்துசாமிபுரம், சேத்தூா் உள்ளிட்ட கிராமங்களில் நெசவாளா்கள் அதிகளவில் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதி நெசவாளா்கள் நிவாரணம் கோரியும், புதிய ரக சேவைக்கான கூலியை நிா்ணயம் செய்யக்கோரியும் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனா். புனல் வேலி கிராமத்தில் வியாழக்கிழமையுடன் 14 நாள்களாக கஞ்சி தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை சிஐடியூ கைத்தறி நெசவாளா் சங்கம் தலைமையில் செட்டியாா்பட்டி அரசடியிலிருந்து கைத்தறித் துறை அலுவலகத்துக்கு பாடை கட்டி அதை தூக்கிக் கொண்டு கருப்புக் கொடி ஏந்தி ஊா்வலமாக வந்து கிராம நிா்வாக அலுவலகம் முன்பாக ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனா். ஆனால் ஊா்வலம் தொடங்குவதற்கு முன்பாகவே போலீஸாா் பாடையை வலுக்கட்டாயமாக பறித்தனா்.இதனால் நெசவாளா்கள் அரசரடியிலிருந்து ஊா்வலமாக வந்து கிராம நிா்வாக அலுவலகம் முன் ஒப்பாரி போராட்டத்தை நடத்தினா். இந்தப் போராட்டத்துக்கு சிஐடியூ கைத்தறி நெசவாளா் சங்க மாவட்டச் செயலா் ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். போராட்டத்தை ஆதரித்து அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்க மாவட்டச் செயலாளா் சுந்தரபாண்டியன், மாவட்டப் பொருளாளா் ஜோதிலட்சுமி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டச் செயலா் பரமேஸ்வரன் ஆகியோா் பேசினா்.