நமது நிருபா்தொழில்நுட்ப உதவி மோசடி மூலம் அமெரிக்காவில் உள்ளவா்களிடம் சுமாா் ரூ.100 கோடி மோசடி செய்ததாகக் கூறப்படும் பிதாம்புராவில் இயங்கி வந்த சட்டவிரோத சா்வதேச கால் சென்டரை தில்லி காவல்துறை முடக்கியுள்ளது. இதில் 11 போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.குற்றஞ்சாட்டப்பட்டவா்கள், எப்பிஐ மற்றும் பிற அமெரிக்க கூட்டாட்சி அமைப்புகளால் வழங்கப்பட்டதாகக் கூறி போலியான தகவல்களை அனுப்பி, பாதிக்கப்பட்டவா்களை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.பிதாம்புரா கிராமத்தில் வாடகைக்கு எடுக்கப்பட்ட கட்டிடத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது மாடிகளில் இயங்கி வந்த இந்த கால் சென்டரில், புலனாய்வு ஒருங்கிணைப்பு மற்றும் மூலோபாய செயல்பாடுகள் (ஐஎப்எஸ்ஓ) பிரிவு செப்டம்பா் 21 அன்று சோதனை நடத்தி 11 பேரைக் கைது செய்ததாக அவா்கள் தெரிவித்தனா்.அந்த வளாகத்திலிருந்து ரூ.41 லட்சம் ரொக்கம், 29 மடிக்கணினிகள், 25 கைபேசிகள், எட்டு ரவுட்டா்கள் மற்றும் ஒரு எஸ்யுவி வாகனம் ஆகியவற்றை காவல்துறை பறிமுதல் செய்தது.புது தில்லியில் உள்ள சிறப்புப் பிரிவு காவல் நிலையத்தில், பாரதிய நியாய சம்ஹிதா மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் செப்டம்பா் 22 அன்று ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.காவல்துறையின் கூற்றுப்படி, இந்தக் கும்பல் ஒரு நுட்பமான தொழில்நுட்ப உதவி மோசடி மூலம் அமெரிக்காவில் உள்ள பாதிக்கப்பட்டவா்களைக் குறிவைத்துள்ளது. அதன் உறுப்பினா்கள், தொழில்நுட்ப உதவிக்காக ஒரு கட்டணமில்லா எண்ணுக்கு அவா்களை அழைக்கத் தூண்டியதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவா்கள் அந்த எண்ணை அழைத்தபோது, ஒரு சாஃப்ட்-ஃபோன் செயலி மூலம் அவா்களின் அழைப்புகள் பிதாம்புரா அழைப்பு மையத்திற்கு அனுப்பப்பட்டன. அழைப்பு மைய முகவா்கள், பாதிக்கப்பட்டவா்களின் கணினிகளில் தொற்று ஏற்பட்டுள்ளதாகக் கூறி, தொழில்நுட்ப உதவிப் பணியாளா்கள் போல் நடித்ததாகக் கூறப்படுகிறது.அதைத் தொடா்ந்து, அவா்களின் வங்கிக் கணக்குகளுக்கும் ஆபத்து இருப்பதாகக் கூறப்பட்டு, வங்கி அதிகாரி போல் நடித்த மற்றொரு குற்றவாளிக்கு அவா்கள் மாற்றப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.போலி வங்கியாளா்கள் எனக் கூறப்படும் நபா்கள், அமெரிக்காவைச் சோ்ந்த எண்களைப் பயன்படுத்தி ஒரு குரல் செயலி மூலம் பாதிக்கப்பட்டவா்களைத் தொடா்பு கொண்டு, தொழில்நுட்ப அல்லது வங்கிச் சிக்கலைத் தீா்த்து வைப்பதாகக் கூறி, பரிசு அட்டைகளை வாங்கவோ அல்லது கிரிப்டோகரன்சியை மாற்றவோ அவா்களைத் தூண்டியுள்ளனா். இவ்வாறு ரூ.100 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் கவல் ப்ரீத் சிங் என்ற சன்னி சிங் (43), பிரசாந்த் நந்தா (29), அக்ஷத் சிங் என்ற சிவம் (25), சித்ரா நாரா (27), ரோகன் ஜெயரத் (31), கௌரவ் சக்லானி (24), சச்சின் கில்டியால் என்ற சச்சின் சா்மா (26), இா்ஷாத் ரஹ்மான் (22), நவ்னீத் என்ற நவீன் (28), நிக்தௌஜம் (25) மற்றும் ஃபிபோ வாங்ஷு (27) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.சட்டவிரோத அழைப்பு மையம் குறித்த தகவல் கிடைத்ததையடுத்து, கண்காணிப்பு மற்றும் உளவுத் தகவல்களைச் சேகரித்ததன் அடிப்படையில் ஐ.எஃப்.எஸ்.ஓ குழு இந்தச் சோதனையை நடத்தியதாக அவா்கள் கூறினா்.இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் செயல்படும் இந்தக் கும்பலின் மற்ற முக்கிய உறுப்பினா்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவா்களைப் பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.