மும்பை ஐஐடி மாணவர் சாஹில் வகோடேவின் தற்கொலை விவகாரத்தில், நிறுவன இயக்குநர், பேராசிரியரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும் இவ்வழக்கு குறித்து நடுநிலையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் இளைஞர் காங்கிரஸ் தேசியத் தலைவர் உதய் பானு சிப் வலியுறுத்தினார்.இதுதொடர்பாக அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், ஐஐடி மும்பை மாணவர் வகோடே சாதி ரீதியான, மனரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார். அவர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதே அவர் தீவிர முடிவை எடுக்கக் காரணமாக அமைந்தது. இரண்டாமாண்டு பி.டெக் மாணவர் வகோடே ஏஐ பயன்படுத்தி பிடிபட்ட நிலையில், அன்று மாலை தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஆனால், அவரது பெற்றர் சாதி ரீதியான பாகுபாடு, துன்புறுத்தல் இருந்ததாகக் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் இடந்தக் குற்றச்சாட்டுகளைக் கல்வி நிறுவனம் மறுத்துள்ளது. மாணவர்களின் போராட்டங்களைத் தொடர்ந்து, பேராசிரியர் சூர்யநாராயண டூல்லா, விவகாரங்களுக்கான டீன் பதவியிலிருந்து நீக்கப்பட்டு விடுப்பில் அனுப்பப்பட்டார்.இந்த விவகாரத்தில் கல்வி நிறுவனம் நடத்தும் விசாரணை நடுநிலையானதாக இருக்க முடியாது, எனவே ஐஐடி மும்பை இயக்குநர், பேராசிரியர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட வேண்டும் என்று இளைஞர் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. கடந்த ஏழு மாதங்களில், மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகக் கூறிய அவர், குற்றப்பிரிவு போலீசாரிடம் உள்ள வகோடேவின் மடிக்கணினி, செல்போன், பிற மின்னணு சாதனங்களில் உள்ள தரவுகளை அவரது குடும்பத்தினரிடம் விரைவாக ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரினார்.மாணவர் சாஹிலுக்கு நீதி கிடைக்கும் வரை இளைஞர் காங்கிரஸ் தனது போராட்டத்தைத் தொடரும் என்று அவர் கூறினார்.இதனிடையே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வகோடேவின் பெற்றோரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு இரங்கல் தெரிவித்ததாகவும், தங்கள் மகனுக்கு நீதி கிடைக்கக் காங்கிரஸ் தொடர்ந்து பாடுபடும் என்று உறுதியளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.