ஜி20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகிற டிசம்பரில் அமெரிக்கா செல்லவுள்ளார்.அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் நேஷனல் டோரா மியாமி ரிசார்ட்டில் ஜி20 மாநாடு வருகிற டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கிறது. பல்வேறு உலகத் தலைவர்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமை தாங்கும் நிலையில், மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி, டிச.14, 15 ஆகிய இரண்டு நாள்கள் அமெரிக்கா பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருதரப்பு வர்த்தகம் மற்றும் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது விதிக்கப்பட்டுள்ள 100 சதவிகித வரிகள் மூலமாக இந்தியாவை அச்சுறுத்திவரும் சூழலில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப் இருவரும் சந்திக்கவிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. வழக்கமாக பிரதமர் மோடியின் பயணம் குறித்த அறிவிப்புகள், தேதிக்கு நெருங்கிய நாள்களில் வெளியிடப்படும் என்பதால் அதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை.இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் கூறுகையில், “ஜி20 உச்சிமாநாட்டில் டிரம்ப் சந்திக்கவிருக்கும் முக்கிய தலைவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர்” என்றார்.ஜி20 மாநாட்டின் ஒரு பகுதியாக இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியாவை ஒன்றிணைக்கும் ‘குவாட்’ தலைவர்களுக்கான உச்சிமாநாட்டின் ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. புளோரிடாவுக்கு மேற்கொள்ளும் பயணத்தைத் தொடர்ந்து, பிரதமர் மோடி கனடாவுக்கும் பயணம் மேற்கொண்டு அந்நாட்டு பிரதமர் மார்க் கார்னியை சந்திக்க வாய்ப்புள்ளதாகத் தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. PM Modi is expected to travel to the US for the December 14-15 G20 Summit in Florida, with a possible Quad meeting and bilateral talks with Donald Trump, followed by a likely visit to Canada.