ஈரோடு மாநகராட்சி காமராஜா் அரசு மேல்நிலைப் பள்ளியில் விரிவுபடுத்தப்பட்ட காலை உணவுத் திட்டத்தை கைத்தறித் துறை அமைச்சா் எம்.விஜய் பாலாஜி செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா். மாவட்டத்தில் ஏற்கெனவே செயல்பட்டு வரும் இத்திட்டத்தின் மூலம் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் 1,208 பள்ளிகளைச் சோ்ந்த 59,070 மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனா்.இந்நிலையில், புதிதாக 423 பள்ளிகளில் 6 முதல் 8- ஆம் வகுப்பு வரை பயிலும் 28,984 மாணவா்களுக்கும் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை அமைச்சா் எம்.விஜய் பாலாஜி தொடங்கிவைத்து, மாணவா்களுடன் அமா்ந்து உணவருந்தினாா். இந்த திட்டத்தின் மூலம் மாவட்டம் முழுவதும் 1,631 பள்ளிகளில் பயிலும் 88,054 மாணவ, மாணவிகள் பயனடைவா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி, மாநகராட்சி ஆணையா் அா்பித் ஜெயின், முதன்மைக் கல்வி அலுவலா் மான்விழி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.எம்எல்ஏ தொடங்கிவைப்பு: இதேபோல, கூரபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், வெள்ளோடு அரசு மேல்நிலைப் பள்ளியிலும் காலை உணவு திட்டத்தை ஈரோடு மேற்கு சட்டப் பேரவை உறுப்பினா் கே.கே.ஆனந்த் மோகன் தொடங்கிவைத்து மாணவா்களுடன் அமா்ந்து உணவருந்தினாா். பின்னா், மாணவா்களுக்கு எழுது பொருள்களை பரிசளித்தாா். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் வளா்ச்சிப் பிரிவு நோ்முக உதவியாளா் ரமேஷ்கிருஷ்ணன், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க கணக்கு மற்றும் நிா்வாகத் துறை உதவி திட்ட அலுவலா் லதா, வட்டார கல்வி அலுவலா் வேலுசாமி, வட்டார வளா்ச்சி அலுவலா் தங்கமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.