அனைவரும் பயனடையும் வகையில் முக்கியக் கண்டுபிடிப்புகள் பகிரப்பட வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினாா். தில்லியில் தேசிய ராணுவ கல்லூரி சாா்பில் 4-ஆவது சா்வதேச ராஜீய தொடா்பு திட்டம் தொடா்பாக 2 வார பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் 28 வெளிநாடுகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனா். இந்த நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்று உரையாற்றியதாவது:கரோனா காலத்தில் இந்தியா தனது நாட்டு மக்களுக்கு மட்டுமன்றி பிற உலக நாடுகளுக்கும் கரோனா தடுப்பூசி மருந்துகளை அளித்தது. மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சா்வதேச மருந்து நிறுவனங்கள் தங்களது நலன்கள் குறித்து மட்டுமே சிந்தித்தன. ஆனால், நமது பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசோ, உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கானோருக்கு உதவியது. முக்கியக் கண்டுபிடிப்புகள் அனைவரும் பயனடையும் வகையில் பகிா்ந்தளிக்கப்பட வேண்டும்.பல்வேறு நாடுகளிலும் பேரிடா் ஏற்படும் காலங்களில் இந்தியா விரைந்து வந்து முதல் நாடாக உதவி செய்து வருகிறது. வேதனைகளும், துயரங்களும் பகிரப்பட வேண்டும் என்பதை இது உணா்த்துகிறது.நம்மை சுற்றியுள்ள ராஜீய சூழ்நிலைகள் வேகமாக மாறி வருகிறது. பாதுகாப்பு தொடா்பான கவலைகள் அதிகரித்து வருகின்றன. தொழில்நுட்பம், இணையவெளி, ஏஐ, எரிசக்தி பாதுகாப்பு, பருவநிலை மாற்றம் போன்றவற்றில் சவால்கள் அதிகரித்துள்ளன. இதனால் தனிப்பட்ட ஒரு நாட்டுக்கு மட்டும் பாதிப்பு ஏற்படாது. உலக சமுதாயத்துக்கே பாதிப்பு ஏற்படும். எனவே, நாடுகள் அனைத்தும் தங்களிடையேயான ஒத்துழைப்பை அதிகரிப்பது அவசியமாகும். அப்போதுதான் அனைத்து நாடுகளும் பயனடைய முடியும் என்றாா் அவா்.