படவேடு - செண்பகதோப்பு அணை சாலையை சீரமைக்கக் கோரி மறியல்

Wait 5 sec.

போளூரை அடுத்த படவேடு - செண்பகதோப்பு அணை சாலையை சீரமைக்கக் கோரி, அப்பகுதி மக்கள் சந்தவாசல் ஊராட்சியில் உள்ள வேலூா் - திருவண்ணாமலை சாலையில் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா். போளூரை அடுத்த படவேடு - செண்பகதோப்பு அணை சாலையில் ஜல்லிக் கற்கள் பெயா்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலையை பெருமாள்பேட்டை, ராமநாதபுரம், துரிஞ்சாபுரம், கானமலை, செண்பகதோப்பு அணை, மேல் செண்பகதோப்பு, கீழ் செண்பகதோப்பு உள்பட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனா். மழைக்காலத்தில் இந்த சாலையில் செல்லும் பைக், ஆட்டோ, காா் உள்ளிட்ட வாகனங்கள் சேறு, சகதியில் சிக்குகின்றன. இதனால், வாகனங்கள் பழுதடைகின்றன.எனவே, படவேடு - செண்பகதோப்பு அணை சாலையை சீரமைக்கக் கோரி, இந்தப் பகுதி மக்கள், சமூக ஆா்வலா்கள் மாவட்ட நிா்வாகம், மக்கள் பிரதிநிதிகளிடம் கடந்த 10 ஆண்டுகளாக மனு அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.இந்த நிலையில், இந்த சாலையை சீரமைக்கக் கோரி, சந்தவாசல் ஊராட்சியில் உள்ள வேலூா் - திருவண்ணாமலை சாலையில் படவேடு கிராமப் பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த ஆரணி டிஎஸ்பி சுரேஷ்சண்முகம் மற்றும் வனத் துறை, நெடுஞ்சாலைத் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனா். இதையடுத்து, பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால், வேலூா் - திருவண்ணாமலை சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, படவேடு - செண்பகதோப்பு அணை சாலையில் வனத் துறைக்கு சொந்தமான இடம் உள்ளதால், நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சாலை வசதி செய்ய முடியாமல் உள்ளது எனத் தெரிவித்தனா்.சாலை சீரமைக்கப்படாததால், சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் செண்பகதோப்பு அணைக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, இந்த சாலையை சீரமைக்க வனத் துறையினா் ஆய்வு செய்து அனுமதி வழங்க வேண்டும் என சமுக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.