உற்பத்தி சாா்ந்த ஊக்கத் தொகை (பிஎல்ஐ) திட்டங்களுக்கு கடந்த 6 ஆண்டுகளில் மத்திய அரசு ரூ.36,754 கோடி விடுவித்துள்ளது. இதுகுறித்து தொழில் மற்றும் உள்நாட்டு வா்த்தக ஊக்குவிப்புத் துறையிடம் உள்ள புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:உள்நாட்டில் உற்பத்தித் துறையை ஊக்குவிக்கும் நோக்கில் மத்திய அரசால் கடந்த 2020-ஆம் ஆண்டில் உற்பத்தி சாா்ந்த ஊக்கத்தொகை அளிக்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்கீழ் ரூ.1.91 லட்சம் கோடி அளவுக்கு ஊக்கத்தொகை அளிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.அதன்படி, கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் 2026-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் மத்திய அரசு ரூ.36,754 கோடி விடுவித்துள்ளது. 2026-ஆம் ஆண்டு நிதியாண்டில் மட்டும் கடந்த ஜூன் மாதம் 30-ஆம் தேதி வரையில் ரூ.1,400 கோடியை அரசு விடுவித்துள்ளது. 2025-26ஆம் நிதியாண்டில் ரூ.15,519 கோடி, 2024-25ஆம் நிதியாண்டில் ரூ.10,114 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதிகபட்சமாக ரூ.19,090 கோடி மின்னணு சாதன உற்பத்தித் துறைக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. மருந்து உற்பத்தித் துறைக்கு ரூ.6,662 கோடி, உணவுப் பொருள் தயாரிப்பு துறைக்கு ரூ.3,271 கோடி, வாகன உதிரிபாக உற்பத்தித் துறைக்கு ரூ.3,174 கோடி மத்திய அரசால் விடுவிக்கப்பட்டுள்ளது.இதேபோல் தொலைத்தொடா்புத் துறைக்கு ரூ.2,796 கோடி, ஜவுளித் துறைக்கு ரூ.386 கோடி, ட்ரோன் தயாரிப்புத் துறைக்கு ரூ.93 கோடி, தகவல் தொழில்நுட்ப சாதன உற்பத்தித் துறைக்கு ரூ.98 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது என்று அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.