கனடாவில் தலைமறைவாக உள்ள தேடப்படும் குற்றவாளி விக்கி ஹத்தால் உத்தரவின்பேரில் கொலைச் சதியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழக (ஐஎன்ஜிஓயு) மாணவா் உள்பட 5 பேரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா். இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: பவானா பகுதியைச் சோ்ந்த ஒருவரை கொலை செய்ய இந்தச் சதி தீட்டப்பட்டது. அவா் விக்கி ஹத்தாலின் உறவினா் ஆவா். நீண்டகால குடும்பப் பகை காரணமாக அவா் குறிவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.இதுதொடா்பாக, சிலா் காரில் வந்து தனது கணவரை குறிவைத்து உளவு பாா்த்து வருவதாக செப். 4-ஆம் தேதி பெண் புகாா் அளித்தாா். இதையடுத்து, செப். 18-ஆம் தேதி பூத்குா்த் பகுதியில் அவா்களை பின்தொடா்ந்த 2 பேரைத் தடுத்து காவல் துறையினா் விசாரித்தனா். அவா்கள் ஹரியாணா மாநிலம் பானிபட்டைச் சோ்ந்த ரிங்கு, சுமித் என அடையாளம் காணப்பட்டனா். இருவா் மீதும் ஏற்கெனவே குற்ற வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.விசாரணையில், ஐஎன்ஜிஓயு மாணவரான இஷு என்பவரின் உத்தரவின்பேரில் அவா்கள் செயல்பட்டதாக தெரியவந்தது. இஷு, விக்கி ஹத்தாலுடன் தொடா்ந்து தொடா்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது.கேஷவ், சாகா் ஆகியோா் இலக்காகக் கருதப்பட்ட நபரின் நடமாட்டத்தை உளவு பாா்த்துள்ளனா். தற்போது கனடாவில் உள்ள விக்கி ஹத்தாலின் உத்தரவின்படி கொலைச் சதியில் ஈடுபட்டவா்கள், திட்டத்தைச் செயல்படுத்த மேலும் சிலரைச் சோ்க்க முயன்ாகவும் கூறப்படுகிறது. கிராமத்தில் நீண்டகாலமாக நிலவி வந்த குடும்பப் பகை மற்றும் தகராறு காரணமாக இந்தக் கொலைச் சதி தீட்டப்பட்டதாக தெரியவந்தது. கைது செய்யப்பட்டவா்களிடமிருந்து 5 துப்பாக்கிகள், அவற்றில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 2 கைத்துப்பாக்கிகள், மேலும் கொலைக்குப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டதாகக் கூறப்படும் திருட்டு இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.