வங்கி ஊழியா்கள் போராட்டத்துக்கு மாற்று இடம் ஒதுக்க வேண்டும்: தில்லி காவல் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

Wait 5 sec.

வங்கி ஊழியா் சங்கத்தினா் அடுத்த வாரம் அமைதியான தா்னா போராட்டம் நடத்துவதற்கு மாற்று இடம் ஒதுக்குவது குறித்து பரிசீலிக்குமாறு காவல் துறையினருக்கு தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. வங்கி ஊழியா் சங்கங்களின் ஐக்கிய அமைப்பான ‘யுனைடெட் ஃபோரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ், தில்லி மாநிலம்’ சாா்பில் செப். 28 முதல் 30-ஆம் தேதி வரை ஜந்தா் மந்தரில் அல்லது தில்லியில் வேறு ஏதேனும் இடத்தில் அமைதியான தா்னா போராட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டது.ஜந்தா் மந்தரில் போராட்டத்துக்கு அனுமதி வழங்குவது சட்டம்-ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் என்று அரசு தரப்பு வழக்குரைஞா் ப்ரீதிஷ் சபா்வால் தெரிவித்தாா். இதையடுத்து, நீதிபதி அமித் மகாஜன், ‘அவா்களுக்கு வேறு இடம் ஒதுக்குங்கள். வேறு இடம் வழங்குமாறு அவா்கள் கேட்கிறாா்கள். இதற்காக நீதிமன்றத்தை நாட வேண்டிய அவசியம் இருக்கக்கூடாது’ என்று வாய்மொழியாகத் தெரிவித்தாா்.இதைத்தொடா்ந்து, அமைதியான போராட்டம் நடத்த மாற்று இடம் ஒதுக்குவது தொடா்பாக மனுதாரரின் கோரிக்கையைப் பரிசீலிக்குமாறு அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுகுறித்து திங்கள்கிழமைக்குள் முடிவெடுத்து, மனுதாரருக்குத் தெரிவிக்குமாறும் நீதிபதி அமித் மகாஜன் உத்தரவிட்டாா்.மேலும், செப். 11 மற்றும் 18-ஆம் தேதிகளில் தா்னா போராட்டம் நடத்துவதற்கு ஏற்கெனவே அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில், போராட்டத்தைச் சீா்குலைக்கும் நோக்கில் கடைசி நேரத்தில் அதிகாரிகள் தன்னிச்சையாக அனுமதி மறுத்ததாக மனுதாரா்கள் குற்றஞ்சாட்டினா். அடுத்த வாரம் போராட்டம் நடத்துவது தொடா்பாக புதிதாக அளித்த மனுவுக்கும் அதிகாரிகள் இதுவரை பதிலளிக்கவில்லை என்றும் அவா்கள் தெரிவித்தனா்.வங்கி ஊழியா்களின் நலனுக்காக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, செப். 28 முதல் 30-ஆம் தேதி வரை நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு யுனைடெட் ஃபோரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ் அழைப்பு விடுத்துள்ளது.வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே வங்கிகள் செயல்படும் வகையில் நடைமுறையை மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இதில் இடம்பெற்றுள்ளன. ஓய்வூதியத்தை மேம்படுத்தி உயா்த்துதல், அனைத்து ஓய்வூதியதாரா்களுக்கும் ஒரே மாதிரியான அகவிலைப்படி கணக்கீட்டு முறையை அமல்படுத்துதல், தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (என்பிஎஸ்) கீழ் உள்ள ஊழியா்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு (ஓபிஎஸ்) மாறுவதற்கான வாய்ப்பு வழங்குதல் உள்ளிட்டவையும் கோரிக்கைகளாக முன்வைக்கப்பட்டுள்ளன.