கேரளத்தில் இடதுசாரி ஜனநாயக முன்னணியை (எல்டிஎஃப்) குறிவைக்கும் நோக்கிலேயே சிஎம்ஆர்எல் தொடர்பான விசாரணை நடத்தப்படுவதாக கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரான பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். ஆலப்புழாவில் நடைபெற்ற விரிவுபடுத்தப்பட்ட சிபிஐ (எம்) மாவட்டக் குழுக் கூட்டத்தை பினராயி விஜயன் தொடங்கிவைத்துப் பேசினார். தன்னைக் குறிவைப்பதன் மூலம் தனது கட்சியையும் இடதுசாரி முன்னணியையும் குறிவைப்பதில் காங்கிரஸும் பாஜகவும் கைகோர்த்துள்ளது. எக்ஸாலஜிக் மற்றும் சிஎம்ஆர்எல் நிறுவனங்களுக்கு இடையே ஒப்பந்தம் இருந்ததாகவும், சட்டத்திற்கு உட்பட்டே சேவைகள் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.ஒரு நிறுவனம் மற்றொரு நிறுவனத்திற்குச் சட்டப்படி சேவையை வழங்கியுள்ளது. அந்தச் சேவைக்கான ஊதியமும் சட்டப்படியே பெறப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கான அனைத்து வரிகளும் முறையாகச் செலுத்தப்பட்டுள்ளன. "இதில் என்ன குற்றம் இருக்கிறது?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.எக்ஸாலஜிக் நிறுவனத்தின் உரிமையாளர் தனது மகள் என்பதால்தான் அதுகுறித்த கேள்விகள் எழுப்பப்படுவதாக அவர் குறிப்பிட்டார். விசாரணையைக் கண்டு தான் அஞ்சவில்லை. இதையெல்லாம் நான் முன்பே பார்த்திருக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.