இன்று காஞ்சி காமாட்சியம்மன் கோயில் நடை அடைப்பு! பக்தர்கள் ஏமாற்றம்

Wait 5 sec.

காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயம் நடை சாத்தப்படும் என முறையாக ஊடகங்கள் வாயிலாக அறிவிக்காததால் விடுமுறை தினமான இன்று ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.கோயில் நகரம் என கூறப்படும் காஞ்சிபுரம் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற பல கோயில்கள் அமைந்துள்ளன. குறிப்பாக காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயில் சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சி காமாட்சியம்மன் கோயில், பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான ஏகாம்பரநாதர் கோயில்கள் குறிப்பிடத்தக்கன. அவ்வகையில் சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான உள்ளூர், வெளியூர், வெளி மாநில என பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் தரிசனம் மேற்கொள்வது வழக்கம். இந்த நிலையில் சனிக்கிழமையான இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடை சாற்றப்பட்டு பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று ஆதிசங்கரர் உற்சவ விஸ்வரூபம் யாத்திரை விழாவுக்காக காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் அருகே உள்ள உபநிஷத் மடத்திற்கு ஆதிசங்கர் செல்வதால் பக்தர்கள் தரிசனம் கிடையாது என அறிவிப்பு பலகை திருக்கோயில் முன்பு வைக்கப்பட்டுள்ளது. தரிசனம் ரத்து குறித்து முன்னரே திருக்கோயில் நிர்வாகம் ஊடகங்கள், பத்திரிகைகளுக்கு முறையாக அறிவிப்பு அளிக்காததால் இந்த தகவல் தெரியாமல் விடுமுறை நாளான சனிக்கிழமை இன்று பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருகை தந்தனர். ஆதிசங்கரர் திருக்கோயிலில் இருந்து புறப்பட்ட உடன் திருக்கோயில் உள்ளே இருந்த பக்தர்களுக்கு மட்டும் தரிசனம் அனுமதிக்கப்பட்டு, உள்ளே செல்லும் பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். முன்கூட்டியே தகவல் தெரிவித்து இருந்தால் திருக்கோயில் தரிசன நிகழ்ச்சி மறுநாள் வைத்துக் கொண்டிருக்கலாம் என பக்தர்கள் வருத்தத்துடன் சென்றனர். Kanchi Kamakshi Amman Temple closed today Devotees disappointed