நடிகராக பாக்யராஜ் தாவணிக் கனவுகளில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்திய சினிமா கண்ட மிகச்சிறந்த திரைக்கதையாசிரியர்களில் ஒருவரான இயக்குநர் பாக்யராஜ் காலமான செய்தி 1980-களிலிருந்து அவரைக் கண்டு வரும் ரசிகர்களுக்கு மிகுந்த துயரை அளித்திருக்கிறது. இன்றைய ரசிகர்களுக்கு பாக்யராஜ் நடிகராகத் தென்படும் முகமாகவே இருந்தார். ஆனால், காலத்தைச் சுட்டிக்காட்டில், ‘ஒரு காலத்தில்’ பாக்யராஜ் திரைப்படம் என்றால் குடும்பம் குடும்பமாக திரையரங்குகளை மொய்த்துக்கொண்டிருந்த கூட்டத்தை தமிழ் சினிமா மறக்குமா? புதிய வார்ப்புகளில் அறிமுகம் பாக்யராஜ் என ஷாட் வரும்போது பெரிய ஃப்ரேம் கொண்ட கண் கண்ணாடி, அழுத்தி சீவப்பட்ட தலை முடி என அன்றைய ஸ்டைலான நாயக மோகத்திற்கு நடுவே யாருய்யா இது? என நடிகராக ஆட்டத்திற்குள் வந்தார். கடந்த 50 ஆண்டுகளாக பாக்யராஜின் பெயரைச் சொல்லாத, பெயர் இடம்பெறாத சினிமா கதை விவாதங்களோ, காட்சிகளின் மேற்கோள்களோ இல்லாமல் இருந்ததில்லை. வசனங்களைச் சிறப்பாக எழுதுவதுடன் அதனை நடிகர்களிடம் பேசி நடித்தும் காட்டுவார். நடிகர் ரஜினிகாந்த் உள்பட பலரும் பாக்யராஜிடம் அப்படி வசனம் கேட்டவர்கள்தான். பாக்யராஜ்யை நம்பி வேலையைக் கொடுத்தால் நடிகர்களிடம் மிகச் சிறப்பாக வசனங்களும் அதற்கான உடல்மொழிகளும் கச்சிதமாக வெளிப்படும் என்பதால் பாரதிராஜாவின் பல திரைப்படங்களுக்கு உயிரோட்டமாக இருந்தார். எந்த வசனங்களையும் திரைக்கதையையும் பாக்யராஜ் நம்பினாரோ அதுவே புதிய வார்ப்புகளில் அவரைக் கதாநாயகனாகவும் மாற்றியது. அருகே இருந்து பார்த்த ஆள் என்பதால் பாக்யராஜின் எந்த இயல்பையும் மாற்றாமல் அப்படியே பாரதிராஜா அக்கதாபாத்திரத்தை வடிவமைத்தார். புதிய வார்ப்புகளில் பாக்யராஜின் நடிப்பு பேசப்பட்டது. தாவணிக் கனவுகள் திரைப்படத்தில் தொடர்ந்து, இயக்குநராக பாக்யராஜ் சுவரில்லாத சித்திரங்கள் படத்தை இயக்கினார். அது வெற்றி பெற அடுத்தடுத்து வெற்றிகளைத் தருகிறார். ஆனால், இன்றும் ரசிகர்களால் மறக்க முடியாத பாக்யராஜ் படங்களில் ஒன்று தாவணிக் கனவுகள். வயசுக்கு வந்த தங்கைகளுக்கு ஒரே அண்ணனாக வாழ்க்கையை எதிர்கொள்ளும் நாயகனாக பாக்யராஜ். எப்படியாவது குடும்பத்தின் நிலையை மாற்றி தங்கைகளுக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்கிற எண்ணம். படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காததால், சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி சென்னை செல்கிறார். ஒருநாள் பாரதிராஜா படப்பிடிப்பில் வேலை கிடைக்கிறது. அங்கு திருமணத்திற்கு முன்பே கற்பை இழந்த தங்கையிடம் அண்ணன் கதாபாத்திரம் உணர்வுப்பூர்வமாக பேச வேண்டிய வசனத்தை நாயகன் பேசத் திணற, வேடிக்கைப் பார்க்கும் பாக்யராஜ் வெறுப்பாகி நடிகை ராதிகா கதாபாத்திரத்திடம் நான் அந்த அண்ணனாக இருந்திருந்தால் எப்படி பேசியிருப்பேன் என நடித்துக்காட்டுவார். பாக்யராஜின் சிறப்பான நடிப்புக் காட்சிகளில் அதற்குத்தான் முதலிடம் என்பது போல் அக்காட்சி இருக்கும். ”சுகமும் துக்கமும் நம் பார்வையில்தான் இருக்கிறது. ரோஜா செடியில் முள் இருக்கிறது என சங்கடப்படுவதை விட, முள் செடியில் ரோஜா மலர்ந்திருக்கிறதே என சந்தோஷப்படு.” என்கிற வசனத்தைப் பேசி முடித்ததும், பாதிக்கப்பட்ட அண்ணனாக, இன்னொரு உணர்வுப்பூர்வமான வசனத்தைப் பேசி கண்ணீர் விடுவார். அதைப் பார்த்துக்கொண்டிருந்த பாரதிராஜா, ‘என் படத்திற்கு நாயகனும் நீதான். எழுத்தாளனும் நீதான்’ என்பார். உண்மையில், திரையில் பாக்யராஜ் பேசிய அந்த வசனமும் நடிப்பும் இன்றும் தமிழ் சினிமா நினைவுகூறும் நல்ல காட்சிகளில் ஒன்று. கதைக்குள் கதை என்பது போல், தன் தங்கைகளுக்கு நல்ல இடத்தில் மாப்பிள்ளைகளைப் பார்க்க வேண்டும் என படத்தின் இறுதியில் வசதியுள்ள பையன்களைத் தேர்ந்தெடுப்பார். ஆனால், சம்பந்த குடும்பங்களுக்கு வரதட்சணைதான் பெரிதாகத் தெரியும். அதனை உணரும் தங்கைகள், எல்லாரும் உன்னைப் போல் நடிகனாகி சம்பாதித்து அவரவர் தங்கைகளுக்குத் திருமணம் செய்ய முடியுமா? அந்தஸ்தைவிட நல்ல குணமுள்ள ஆண்கள்தான் முக்கியம் என விருப்பப்பட்டவர்களைத் திருமணம் செய்து கொள்கின்றனர். தாவணிக் கனவுகளில் பாக்யராஜ் பல கோணங்களில் கதையைச் சொல்லி, உண்மையில் பெண்களிடமும் அவர்களைத் திருமணம் செய்துகொடுக்கும் குடும்பங்களும் எதிர்பார்க்க வேண்டியது குணத்தைத் தானே தவிர அந்தஸ்தை இல்லை என்பதுடன் முடித்திருப்பார். ஒட்டுமொத்தமாக கதை இதை நோக்கி நகர்ந்தாலும், பாரதிராஜா பாராட்டும் அந்த சில நிமிடங்களிலும் தன் நடிப்பால், எழுத்தால் அங்கும் பாக்யராஜ் பெரிய கதையைச் சொல்லியிருப்பார். சில நிமிடங்கள்தான் என்றாலும் தமிழ் சினிமாவால் என்றும் மறக்க முடியாத காட்சி அது. இயக்குநர் பாரதிராஜா மறைந்த போது, யூடியூபில் உள்ள இந்தக் காட்சியைக் கண்டு பலரும் அவருக்கு இரங்கல்களைத் தெரிவித்தனர். இப்போது, இதே காட்சிக்கு பாக்யராஜுக்கும் இரங்கல்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இந்திய சினிமாவிலேயே பாக்யராஜ் போல இன்னொருவர் இல்லை: ஊர்வசி As an actor, Bhagyaraj delivered an excellent performance in dhavani Kanavugal.