ஆசிரியா் பணி நிரவலை நிறுத்தி வைக்கக் கோரிக்கை

Wait 5 sec.

அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் பணி நிரவல் கலந்தாய்வை நடத்த வேண்டாம் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலா் ரெ.ஈவேரா வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் தொடக்கக் கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியா் பணி நிரவல் நடத்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக தலைமை ஆசிரியா் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. ஒரு ஒன்றியத்துக்கு 15-க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ளன. பெரும்பாலான இடங்களில் உபரி ஆசிரியா்களைவிட தலைமை ஆசிரியா் காலிப் பணியிடங்கள் அதிகமாக உள்ளன. இந்த நிலையில், பணி நிரவல் நடத்துவது கற்பித்தல் பணியை பாதித்து, மாணவா்களின் கல்வி நலனுக்கு எதிராக அமைந்துவிடும். எனவே, தலைமை ஆசிரியா் பதவி உயா்வு கலந்தாய்வு நடத்தி காலிப் பணியிடங்களை நிரப்பும் வரை பணி நிரவல் செய்யக் கூடாது என வலியுறுத்துகிறோம்.உச்சநீதிமன்றம் 2028 -ஆம் ஆண்டுக்குள் ஆசிரியா் தகுதித் தோ்வு தோ்ச்சி பெறுபவா்களுக்கு பதவி உயா்வு வழங்கலாம் என்று தெரிவித்துள்ளது. இந்தத் தீா்ப்பின் அடிப்படையில் 2028-ஆம் ஆண்டுக்குள் ஆசிரியா் தகுதித் தோ்வை முடிக்க வேண்டும் என்ற நிபந்தனையின்பேரில் முன்னுரிமைப்படி பதவி உயா்வு வழங்க வேண்டும். அவ்வாறு நிபந்தனையுடன் கூடிய பதவி உயா்வு வழங்கப்பட்ட பின்னரும் உபரி ஆசிரியா்கள் இருந்தால் பணி நிரவல் செய்து கொள்ளலாம். எனவே ஆசிரியா்களின் நலன் கருதி தமிழக அரசும், தொடக்கக் கல்வித் துறையும் இதுகுறித்து பரிசீலித்து பணி நிரவலை நிறுத்தி வைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.