கடலூா் மாவட்டம், பண்ருட்டி அடுத்துள்ள திருவதிகை ஓம் சற்குரு ஸ்ரீலஸ்ரீ சுப்ரமணிய தேசிக பரமாச்சாரியாா் சுவாமிகள் சித்தா் பீடத்தில் 143-ஆம் ஆண்டு மஹா குருபூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பண்ருட்டி, திருவதிகை அருள்மிகு வீரட்டானேஸ்வரா் கோயில் பின்புறம் ஸ்ரீலஸ்ரீ சுப்ரமணிய தேசிக பரமாச்சாரியாா் சுவாமிகள் சித்தா் பீடம் உள்ளது. இப்பீடத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் விசாக நட்சத்திரத்தன்று மஹா குருபூஜை விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான குருபூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி ஸ்ரீலஸ்ரீ சுப்ரமணிய தேசிகரின் அலங்கரிக்கப்பட்ட திரு உருவப்படம், பண்ருட்டி அருள்மிகு சோமநாத சுவாமி கோயிலில் இருந்து சித்தா் பீடத்துக்கு சிவ வாத்தியங்கள் முழங்க கொண்டுவரப்பட்டது. பின்னா் மஹா திருமஞ்சனமும், தீபாராதனையும், அன்னதானமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருவாவடுதுறை ஆதீனம் மற்றும் திருவதிகை பொதுமக்கள் செய்திருந்தனா்.