விழுப்புரம்: பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு திங்கள்கிழமை (ஜூன் 29) தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் அலுவலர் ஆர்.வினோத் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேசுவரர் சுவாமி திருக்கோயிலில் பௌர்ணமி கிரிவலம் திங்கள்கிழமை (ஜூன் 29) நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கும் பக்தர்களின் வசதிக்காகவும் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது.அந்த வகையில், விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து திங்கள்கிழமை ஜூன் 29-ஆம் தேதிகாலை 10.10 மணிக்குப் புறப்படும் விழுப்புரம்-திருவண்ணாமலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06130), முற்பகல் 11.45 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையத்தை சென்றடையும்.எதிர்வழித்தடத்தில் அதே நாளில் திருவண்ணமலை ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 12.40 மணிக்குப் புறப்படும் திருவண்ணாமலை-விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்புரயில் (வண்டி எண் 06129), பிற்பகல் 2.15 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையம் வந்தடையும்.இந்த ரயில்கள் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர்,அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். மேலும் 8 பெட்டிகளைக் கொண்டதாக இருக்கும் என்று செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளார்.Pournami Girivalam: Special trains operated to Tiruvannamalaiமேட்டூர் அணையின் நீர்மட்ட நிலவரம்!