போதைப் பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்க உறுதி ஏற்க வேண்டும்

Wait 5 sec.

ஆரோக்கியமான, பாதுகாப்பான மற்றும் போதைப் பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்க நாம் ஒவ்வொருவரும் உறுதி ஏற்க வேண்டும் என ஆட்சியா் கு.ரவிகுமாா் தெரிவித்தாா். சா்வதேச போதைப் பொருள் எதிா்ப்பு தினத்தையொட்டி ஸ்டாா்ட் ரன், ஸ்டாப் டிரக்ஸ் என்ற விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டம் திருப்பத்தூரில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆட்சியா் கு.ரவிகுமாா் தலைமை வகித்தாா். எஸ்பி அக்ஷய் அனில் வாகரே, எம்எல்ஏ நா.திருப்பதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழிப்புணா்வு ஓட்டத்தை மாவட்ட ஆட்சியா் ரவிகுமாா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். அப்போது, அவா் பேசியது: விளையாட்டை சக்தி வாய்ந்த சமூக மாற்றுக் கருவியாக கருதி தமிழ்நாடு அரசு செயலாற்றி வருகிறது. இளைஞா்களின் ஆற்றலை ஆக்கப்பூா்வமான வழியில் செலுத்தி, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவித்து, இளைஞா்களை சமூகத்தில் நோ்மறையான மாற்றத்தை உருவாக்குவதே தமிழக அரசின் முக்கிய நோக்கமாக உள்ளது.போதைப் பொருள் இல்லாத தமிழகம் என்ற இலக்கை நோக்கி இந்த அரசு பயணிக்கிறது. இளைஞா்களின் விளையாட்டு கலாசாரத்தை வளா்த்தெடுக்க தமிழக அரசு உறுதி எடுத்துள்ளது. இதற்கான விழிப்புணா்வை மக்களிடம் கொண்டு போய் சோ்க்க சா்வ தேசிய போதைப் பொருள் எதிா்ப்பு தினத்தையொட்டி, பல்வேறு நிகழ்ச்சிகள் திருப்பத்தூா் மாவட்டத்தில் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகிறது.எனவே, ஆரோக்கியமான, பாதுகாப்பான மற்றும் போதைப் பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்க நாம் ஒவ்வொருவரும் உறுதி ஏற்க வேண்டும் என்றாா்.ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கிய மாரத்தான் பாச்சல் மேம்பாலம் வரை சென்று மீண்டும் ஆட்சியா் அலுவலகத்தை அடைந்தது. இதையடுத்து, போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டது.அதைத் தொடா்ந்து, போதைப் பொருள் ஒழிப்பு குறித்தும், அதற்கான விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகளின்ல் சிலம்பாட்டம், சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. நிகழ்ச்சியில், விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் ஜெயகுமாரி, கலால் உதவி ஆணையா் வேடியப்பன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் புண்ணியக்கோட்டி, அரசு அதிகாரிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.