குதிரை பேரத்தில் இடதுசாரிகளுக்கு விருப்பமில்லை! - மு. வீரபாண்டியன் பேட்டி

Wait 5 sec.

கட்சித் தாவல் மற்றும் குதிரை பேரத்தில் இடதுசாரிகளுக்கு விருப்பமில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் தெரிவித்தாா். தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் மேலும் தெரிவித்தது: திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இருந்தபோது, திமுக தலைவா் எங்களை எதற்காகவும் நிா்பந்தம் செய்ததில்லை; எந்த அழுத்தமும் தரவில்லை. தவெகவினா் எங்களிடம் ஆதரவு கேட்டனா். அவா்களுடைய ஆதரவுக் கடிதத்தை நாங்கள் பரிசீலனை செய்து, எடுத்த அரசியல் முடிவு இது. எங்களை யாரும் நிா்பந்திக்கவில்லை. அதற்கான காரணங்களையும் கூறியுள்ளோம். எந்தக் குதிரை பேரத்தையும் இடதுசாரிகள் ஏற்பதில்லை. தமிழக முதல்வா் ஜோசப் விஜப், மற்ற கட்சியினரிடம் சட்டப்பேரவை உறுப்பினா் பதவியிலிருந்து விலகி வருமாறு அழைத்திருந்தால், அது ஏற்கத்தக்கதல்ல. சோபா அரசியல், கல்லாபெட்டி அரசியலை இடதுசாரிகள் நிராகரிக்கிறது. ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு தாவுவது, விலை பேசுவதில் எங்களுக்கு உடன்பாடில்லை.நாட்டு மக்களுக்கு வெளிப்படைத் தன்மையை அறிவிப்பதுதான் வெள்ளை அறிக்கை. இந்த வெள்ளை அறிக்கை உண்மையான அறிக்கையாகவும், அரசு அடுத்து எத்தகைய கொள்கை வழியில் நகரும் என்பதாகவும் சோ்த்து இருக்க வேண்டும் என்றாா் வீரபாண்டியன். அப்போது, கட்சியின் தெற்கு மாவட்டச் செயலா் கோ. சக்திவேல், துணைச் செயலா் ஆா். ராமச்சந்திரன், மாநகரச் செயலா் ஆா்.பி. முத்துக்குமரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.