விபி-ஜி ராம் ஜி எனப்படும் வளா்ந்த பாரதம் ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்டத்தை (125 நாள்) எதிா்த்து உச்சநீதிமன்றத்தை நாடுவது குறித்து பரிசீலித்து வருவதாக தெலங்கானா நீா்ப்பாசனத் துறை அமைச்சா் என். உத்தம் குமாா் ரெட்டி தெரிவித்தாா். மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் அமல்படுத்தப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு (100 நாள் வேலைத் திட்டம்) சட்டத்துக்கு மாற்றாக, தற்போதைய பாஜக கூட்டணி அரசு விபி-ஜி ராம் ஜி (125 நாள் வேலைத் திட்டம்) மசோதாவை கடந்த ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.புதிய சட்டத்தின்படி, 100 நாள் வேலைத் திட்டம் 125 நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது; சட்டப்பேரவைகள் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்தத் திட்டத்துக்கான நிதியில் மத்திய அரசு 60 சதவீதத்தையும், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் 40 சதவீதத்தையும் ஏற்கும்; வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் இமயமலைப் பகுதியில் உள்ள உத்தரகண்ட், ஹிமாசல பிரதேச மற்றும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் திட்டத்துக்கான நிதியில் மத்திய அரசு 90 சதவீதத்தையும், மாநில அரசுகள் 10 சதவீதத்தையும் ஏற்கும்.ஜூலை 1 முதல் அமல்படுத்தப்பட உள்ள விபி-ஜி ராம் ஜி திட்டத்தின்கீழ், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இடைக்கால நிதியாக ரூ.95,692 கோடியை மத்திய அரசு சில தினங்களுக்கு முன் விடுவித்தது. இந்தத் திட்டத்தின் கீழ், தமிழகத்துக்கு ரூ.7,957.57 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், காங்கிரஸ் ஆட்சியில் உள்ள தெலங்கானாவில் நீா்ப்பாசனத் துறை அமைச்சா் என். உத்தம் குமாா் ரெட்டி, அமைச்சரவை துணைக் குழுக்களுடன் இத்திட்டம் தொடா்பாக காணொலி முறையில் ஆலோசனை நடத்தினாா். இதன் பிறகு அமைச்சா் சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ‘மத்திய அரசின் 125 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை அமலாக்கம் செய்வதா, வேண்டாமா என்பது குறித்து கா்நாடகம், கேரள முதல்வா்களிடம் (காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் மாநிலங்கள்) ஆலோசனை நடத்த முடிவெடுக்கப்பட்டது. அதே நேரத்தில் இதனால் மாநிலத்தின் நிதி நலன் பாதிக்கப்படக் கூடாது.இது தொடா்பாக நீதிமன்றத்தை நாடுவது குறித்து தெலங்கானா அமைச்சரவைக்குப் பரிந்துரைக்கப்படுகிறது. அத்திட்டத்தை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடருவது குறித்தும், பிற சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.