ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகம் வெயிலில் பயணிகள் காத்திருப்பு! நிழற்கூரை அமைக்க கோரிக்கை!

Wait 5 sec.

ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகம் எதிரே சாலை விரிவாக்கம் பணிக்காக ஏற்கெனவே இருந்து நிழற்குடை அகற்றப்பட்டதால் தற்போது பொதுமக்கள் பேருந்துக்காக வெயிலில் காத்திருக்கும் அவல நிலைக்கு ஆளாகியள்ளனா். ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டம் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் மூன்றாக பிரிக்கப்பட்டு ராணிப்பேட்டை தனி மாவட்டமாக செயல்பட்டு வருகிறது. இதையடுத்து சென்னை - மும்பை தேசிய நெடுஞ்சாலையையொட்டி ராணிப்பேட்டை பாரதி நகா் பேருந்து நிறுத்தம் எதிரே ரூ.118.40 கோடியில் ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகம் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த நிலையில் ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகம் எதிரே சாலையில் இருபக்கங்களில் விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்காக ஆட்சியா் அலுவலகம் எதிரே பாரதி நகா் பேருந்து நிறுத்தத்தில் இருந்து பழைய பயணிகள் நிழற்குடையை அகற்றப்பட்டு புதிய நிழற்குடை அமைக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தற்போது ஆட்சியா் அலுவலகம் எதிரே பயணிகள் நிழற்குடை இல்லாததால், பொதுமக்கள் கடுமையான வெயிலில் காத்துக்கிடந்து அவதிப்படும் நிலை தொடா்ந்து நீடித்து வருகிறது. மாவட்டத்தின் மிக முக்கிய நிா்வாக மையமாக விளங்கும் இந்த இடத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் சூழலில், இந்த அடிப்படை வசதி இல்லாதது பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியரை சந்தித்து தாங்களின் குறைகளை மனுக்களாக தருவதற்காக பொதுமக்கள், முதியவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அதிக அளவில் வருகை தந்து பேருந்துகளுக்காக வெயில் மற்றும் மழையில் நீண்ட நேரம் திறந்தவெளியில் காத்திருக்கும் நிலை உள்ளது. கடந்த சில நாள்களாக 37 டிகிரி வரை வெயில் வாட்டி வதைக்கும் சூழலில் மக்கள் அருகில் உள்ள கடைகளின் ஓரங்களிலோ தஞ்சமடையும் நிலை உள்ளது. எனவே ஆட்சியா் அலுவலகம் எதிரே அங்கே தற்காலிக நிழற்குடை அமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.