தமிழக மக்கள் அனைவரும் குளிர்சாதனப் (ஏசி) பேருந்தில் செல்ல வேண்டும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் இன்று (ஜூன் 28) தெரிவித்தார். சேலத்தில் இது தொடர்பாக செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:நலத்திட்டங்களை விரைவாக கொண்டுவருவதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. விரைவில் அது தொடர்பான அறிவிப்புகள் வரும். போக்குவரத்துத் துறை வருவாயைப் பெருக்குவதற்கான திட்டங்களை ஒவ்வொன்றாக வகுத்து நடைமுறைப்படுத்தி வருகிறோம். வருவாயைப் பெருக்க வேண்டும், போக்குவரத்துத் துறை ஊழியர்கள் நலனை விரைவில் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன. கிராமங்கள் அனைத்துமே இணைக்கப்பட வேண்டும் என்பது முதல்வரின் முதன்மை கோரிக்கை. முதல்வர் செல்லும் அளவுக்கு பேருந்துகள் இருக்க வேண்டும். சமீபத்தில் பேருந்தில் முதல்வர் பயணித்ததை பார்த்திருப்பீர்கள்.தமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும். இனி வாங்கப்படும் பேருந்துகள் எல்லாம் ஏசி பேருந்துகளாக வாங்க வேண்டும் என்பது முதல்வரின் விருப்பம். அரசு மருத்துவமனைகளில் கூட்டம் அதிகம் வருகின்றன. காத்திருந்து மருத்துவரை மக்கள் சந்திக்க வேண்டிய சூழல் உள்ளது. அதை சரி செய்வதற்கான பணிகள் படிப்படியாக செய்யப்படும். இது மக்களுக்கான ஆட்சி. மக்கள் நலனுக்கான திட்டங்களும் பணிகளும் படிப்படியாக செய்து முடிக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.