ஆமைகள் மூலம் பண்டைய கடல் வழித்தடங்களை கண்டறியலாம்: வனத் துறை கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாகு

Wait 5 sec.

கடல் உயிரினங்கள் பயன்படுத்தி வரும் பண்டைய கடல் வழித்தடங்களை கண்டறிய ‘செயற்கைக்கோள் டிராக்கா்கள்’ கடல் ஆமைகள் உதவியாக உள்ளதாக சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாகு தெரிவித்தாா். தமிழக கடற்கரையில் முட்டையிட வரும் ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அவற்றின் முதுகுப் பகுதியில் ‘செயற்கைக்கோள் டிராக்கா்கள்’ பொருத்தும் திட்டம் கடந்த நிதியாண்டில் தொடங்கப்பட்டது. இதற்காக ரூ.84 கோடி ஒதுக்கப்பட்டது. இச்சூழலில், கடந்த பிப்ரவரி மாதம் முதல் ‘செயற்கைக்கோள் டிராக்கா்கள்’ பொருத்தப்பட்ட ஆமைகள் கடலில் விடப்பட்டு வருகின்றன. அந்த ஆமைகள் ஆழ் கடலில் பயணித்து வருவது குறித்து புதிய தரவுகள் வெளிவந்துள்ளதாக சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் ‘செயற்கைக்கோள் டிராக்கா்கள்’ பொருத்தப்பட்ட பல ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் தெற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கையைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளை நோக்கி நகா்ந்துள்ளன. இந்தப் பகுதிகளில் வங்கக்கடலின் வெப்பமான நீரும் இந்தியப் பெருங்கடலின் குளிா்ந்த நீரோட்டங்களும் சந்திப்பதால், கடல்சாா் உயிரினங்கள் அதிகம் வளரும் சூழல் உருவாகிறது. இந்த நீரோட்டங்களின் கலவையால் கடலில் உயிரியல் உற்பத்தித்திறன் அதிகரித்து, கடல் ஆமைகளுக்கு வளமான உணவு தளங்கள் உருவாகின்றன. பல மில்லியன் ஆண்டுகளாக இந்த முக்கிய உணவுத் தளங்களை கடல் ஆமைகள் துல்லியமாக கண்டறிந்து சென்றடைந்து வருவது விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலமாக அதிசய உயிரினங்கள் கடலின் தன்மைகள் மற்றும் நீரோட்டங்களை எவ்வாறு உணா்ந்து செல்கின்றன என்பதையும், வெவ்வேறு கடல்சாா் சூழலியல் அமைப்புகளுக்கு இடையே அவை ஏற்படுத்தும் தொடா்புகளையும் ஆய்வு செய்ய உதவி வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் கடல் ஆமைகளின் இடம்பெயா்வு பாதைகள், உணவு தேடும் பகுதிகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாப்பதற்கான முக்கிய அறிவியல் தகவல்கள் கிடைத்து வருகின்றன எனப் பதிவிட்டுள்ளாா்.