சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு

Wait 5 sec.

திமுக மாணவரணி சார்பில் சென்னையில் இன்று நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்தியது போன்ற விடியோ வெளியாகி பெரும் சர்சையை ஏற்படுத்தியது. ஆனால் தனது குழந்தைக்கு மாத்திரையை பொடியாக்கி கொடுத்ததாகவும், தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என அமைச்சர் சரத்குமார் சர்ச்சைக்கு விளக்கமளித்திருந்தார். இருப்பினும், இந்த விளக்கத்தை ஏற்க மறுத்து, அமைச்சர் டி.சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி திமுக மாணவர் அணி சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.இதைத்தொடர்ந்து சென்னை எழும்பூரில் இன்று திமுக மாணவர் அணியினர் ஆர்ப்பாட்டத்திற்கான மேடை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய போலீஸார், ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு உரிய அனுமதி பெறாததால் மேடை அமைக்க அனுமதிக்க முடியாது என கூறினர்.பொது இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த 5 நாட்களுக்கு முன்னதாக அனுமதி பெற வேண்டும் எனவும், போராட்டத்திற்கு மாநகர காவல் ஆணையரிடம் முன்அனுமதி பெற வேண்டும் எனவும் போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து தி.மு.க. மாணவர் அணி நிர்வாகிகளுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை போலீஸார் காவல்துறை வாகனங்களில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.