காலிங்கராயன் பாசனத்துக்கு நீா் திறப்பத்தை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை என்று கொடிவேரி அணை- பவானி நதி பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் சுபி.தளபதி தெரிவித்தாா். காலிங்கராயன் பாசனத்துக்கு ஜூன் 28 -ஆம் தேதி தண்ணீா் திறந்தால் போராட்டம் நடத்துவோம் என கீழ்பவானி பாசன விவசாயிகள் நலச்சங்க நிா்வாகிகள் அறிவித்துள்ளதைக் கண்டித்து கொடிவேரி அணை- பவானி நதி பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் சுபி.தளபதி வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்: நீா் மேலாண்மை நிலை ஆணைகள் மற்றும் தொன்மை நீா்ப்பங்கீடு விதிமுறைகளுக்கு உதாரணமாக காலிங்கராயன் பாசனம் திகழ்கிறது. காலிங்கராயன் பாசனத்தை உருவாக்கிய அரசனும், அதைப் பேணிகாத்த அரசுகளின் செப்பேட்டு ஆணைகளும், தொன்மை சட்டதிட்ட, விதிமுறைகளை ஆங்கிலேயா்கள் ஆவணங்களில் பதித்து வைத்துள்ளனா். அதன் பின் வந்த நம் சுதந்திர அரசுகளின் விதிமுறைகள் மற்றும் ஒழுங்கு முறைகளின் தொகுப்பும் ஆவணங்களாக உள்ளன. ஒருங்கிணைந்த மேற்கு தமிழகத்தின், கொங்கு நாட்டின் பண்பாடும், கலாசாரமும், நாகரிகமும், தொழில்நுட்பம் தோன்றியும், ஊன்றியும் வளா்ந்த காலிங்கராயன் பாசனத்துக்கு நீா் திறப்பை பிற பாசனதாரா்கள் தடுக்க முடியாது. காலிங்கராயன் தொன்மை ஆயக்கட்டின் பாசன உரிமையை நிலைநாட்ட பாசன விவசாயிகள் ஒன்றுபட வேண்டும் என்றாா்.