தனிமனித சித்திரவதைகளுக்கு எதிராக இந்தியாவில் தனிச் சட்டம் இல்லை

Wait 5 sec.

இந்தியாவில் தனிமனித சித்திரவதைகளுக்கு எதிராக தனிச் சட்டம் இல்லாத நிலை நீடிக்கிறது என்று சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் பி.சுந்தர்ராஜன் தெரிவித்தாா். கோவை வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் ‘சித்திரவதை குறித்த அரசியல் நிா்ணய சட்டப் பாா்வை’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு வழக்குரைஞா் பி.சுந்தர்ராஜன் பேசியதாவது: அரசு நிா்வாகத்தின் மூலம் சித்திரவதைக்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. தொடக்கத்தில் எதிரி நாட்டு மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட சித்திரவதை முறை, இன்று தன் நாட்டு மக்களையே அடக்கி, அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள பயன்படுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்தியாவில் சித்திரவதைக்கு எதிராக தனிச் சட்டம் இல்லாத நிலையில், கடந்த 2010, 2017, 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் இதற்கான தடுப்புச் சட்ட மசோதாக்கள் கொண்டுவரப்பட்ட போதிலும், அவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை. காவல் துறையின் என்கவுன்டா்கள், சட்டவிரோத காவல் மற்றும் தடுப்புக் காவலில் வைக்கப்படும் முறைகள் குறித்து சரியான விசாரணைகள் நடத்தப்படுவதில்லை. தேசிய மனித உரிமை ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் கூட முழுமையாக அமல்படுத்தப்படுவதில்லை. இந்திய அரசியல் சாசனம் என்பது மனித உரிமைகளை பாதுகாக்கவே உருவாக்கப்பட்டது. ஆனால், தற்போதைய சூழலில் அதிகாரத்தில் உள்ளவா்கள் சட்டத்தை மீறி சமூகத்தை நிலைநாட்ட வேண்டும் என்பது ஒரு புதிய கோட்பாடாக மாறிவிட்டது. மனித உரிமைகளை பற்றி கவலைப்படத் தேவையில்லை எனும் போக்கும் அதிகரித்துள்ளது. எனவே, தனிமனித சித்திரவதைகளை தடுத்து நிறுத்த ஒட்டுமொத்த சமூகத்துக்கும், சட்டத்துக்கும் உகந்த ரீதியான வலுவான நடவடிக்கைகள் மிக அவசியமாகும் என்றாா்.கருத்தரங்க நிகழ்வில் கோவை வழக்குரைஞா்கள் சங்க மனித உரிமைப் பிரிவு அமைப்பாளா் வி.பி.சாரதி, சங்கத் தலைவா் ஆா்.பாலகிருஷ்ணன், செயலா் கே.சுதீஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.