நமது சிறப்பு நிருபர்தமிழகத்தில் 2025-2026 கல்வியாண்டுக்கான அரசு மருத்துவர்களுக்கான உயர் சிறப்பு மருத்துவப் படிப்பில் (சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவம்) காலியாக உள்ள 152 இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒப்படைப்பதற்குத் தடை விதிக்கக் கோரிய மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் புதன்கிழமை ஒப்புக்கொண்டது.இது தொடர்பாக தமிழ்நாடு மருத்துவ அதிகாரிகள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, ஜயமால்ய பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு கவனத்தில்கொண்டு, தமிழக அரசும், மத்திய அரசும் மனுவுக்கு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டது.அப்போது நீதிபதிகள், "ஓர் அரசு மருத்துவர் கூடுதல் தகுதிகளையும் திறன்களையும் பெறும்போது, அவரால் ஒரு தனியார் மருத்துவரைவிட பொது சுகாதாரத் துறைக்குச் சிறந்த சேவையை வழங்க முடியும்' என்று கருத்து தெரிவித்தனர். மேலும் அரசு மருத்துவர்கள், ஒரே நேரத்தில் மருத்துவத் தொழில் செய்தவாறும், மேல்படிப்பையும் மேற்கொள்வதால், மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான தனிப் பிரிவாக அவர்கள் கருதப்படுகிறார்கள் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டு மனு மீதான விசாரணையை வரும் ஜூலை மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.முன்னதாக, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், 2025-2026 கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் அரசு மருத்துவர்களுக்காக ஒதுக்கப்பட்ட 152 காலியிடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இரண்டாம் கட்டக் கலந்தாய்வு செயல்முறைகள் முடியும் வரை காலியாக உள்ளன. அந்த 152 மருத்துவ இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக ஒப்படைக்கத் தடை விதிக்க வேண்டும் என்று கோரினார்.மேலும், இரண்டாம் கட்ட அகில இந்திய கலந்தாய்வுக்குப் பிறகு தகுதிப் புள்ளி 50 சதவீதத்துக்கும் குறைவாக நிர்ணயிக்கப்பட்டால், மூன்றாம் கட்ட அல்லது சிறப்புக் கலந்தாய்வின்போது, தமிழக அரசு மருத்துவர்களும் 152 இடங்களுக்கான சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.கடந்த ஜூன் 4-ஆம் தேதி, தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், மாநிலத்தில் உள்ள 152 உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒப்படைக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் ச. ஜோசப் விஜய்க்கு கடிதம் எழுதினார்.அதில், 2025-ஆம் ஆண்டு நீட் தேர்வு முடிவுகளின் அடிப்படையில், தமிழகத்தில் கலந்தாய்வுக்குக் கிடைத்த 430 உயர் சிறப்பு மருத்துவ இடங்களில் 215 இடங்கள் அரசு மருத்துவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தன என்று உதயநிதி சுட்டிக்காட்டியிருந்தார். "இந்த ஒதுக்கப்பட்ட இடங்களில், கலந்தாய்வின்போது 63 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டன. இரண்டாம் கட்ட கலந்தாய்வு முடிந்த பிறகு 152 இடங்கள் காலியாகவே உள்ளன' என்றும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.