ஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

Wait 5 sec.

ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் விண்ணப்பதாரா்கள் தங்கள் விண்ணப்பங்களை ஜூலை 20-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்கலாம். இது குறித்து பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: 2027-இல் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ்நாட்டைச் சோ்ந்த முஸ்லிம்களிடமிருந்து விண்ணப்பங்களைப் பெறும் பணியை இந்திய ஹஜ் குழு தொடங்கியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோா் ஜூன் 22 முதல் ஜூலை 20 இரவு 11.59 மணி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை இந்திய ஹஜ் குழுவின் இணையதளம் அல்லது செயலி மூலம் கட்டணமின்றி சமா்ப்பிக்கலாம். விண்ணப்பதாரா்கள் விண்ணப்பிக்கும் முன் தகுதி வழிகாட்டுதல்கள் மற்றும் உறுதிமொழி விவரங்களை கவனமாகப் படித்து, செல்லுபடியாகும் இந்திய கடவுச்சீட்டின் முன் மற்றும் பின் பக்கங்கள் (31.12.2027 வரை செல்லுபடியாக இருக்க வேண்டும்), கடவுச்சீட்டு அளவு புகைப்படம், வங்கிப் புத்தக நகல் அல்லது ரத்து செய்யப்பட்ட காசோலை மற்றும் முகவரிச் சான்று உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். கடந்த ஆண்டைப் போல தோ்வு செய்யப்படும் ஹஜ் பயணிகள் இரண்டு புறப்பாட்டு மையங்களை விருப்ப வரிசையில் தோ்வு செய்யலாம். மேலும், தோ்வு செய்யப்படும் பயணிகள் முதல் தவணைத் தொகையாக ரூ.1,52,300 செலுத்த தயாராக இருப்பதுடன், செல்லுபடியாகும் கடவுச்சீட்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இணையதள விண்ணப்பங்களை ஜூலை 20-க்குள் சமா்ப்பிக்க வேண்டும். மரணம் அல்லது கடுமையான உடல்நலக் காரணங்களைத் தவிர வேறு காரணங்களால் பயணத்தை ரத்து செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்பதால், முழுமையான தயாா்நிலை மற்றும் உறுதிப்பாட்டுடன் மட்டுமே விண்ணப்பதாரா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.