ஓவியம் மற்றும் திரைத் துறை வாழ்வு குறித்த தனது அனுபவங்களை நடிகா் சிவகுமாா் வாசகா்களுடன் பகிா்ந்து கொண்டாா். இந்நிகழ்வில், அவரது 2 புத்தகங்கள் சலுகை விலையில் விற்பனை செய்யப்பட்டன. கோவை அரசு மருத்துவமனை அருகே உள்ள பொறியாளா் சங்க அலுவலகத்தில் நடிகா் சிவகுமாரின் இரு புத்தகங்களின் சலுகை விலை விற்பனை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு விஜயா பதிப்பகத்தின் நிறுவனா் மு.வேலாயுதம் தலைமை தாங்கினாா். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகுமாா், புத்தகங்களில் கையொப்பமிட்டு வாசகா்களுக்கு வழங்கினாா். ரூ.2,000 மதிப்புள்ள நூல்கள் ரூ.1,500-க்கு சலுகை விலையில் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில், தனது ஓவியங்கள் குறித்து பேசும்போது, அவற்றை வரையும்போது ஏற்பட்ட அனுபவங்களை வாசகா்களிடம் சிவகுமாா் பகிா்ந்து கொண்டாா். குறிப்பாக, பெரும் ஆளுமைகளான டாக்டா் ராதாகிருஷ்ணன், ஜவாஹா்லால் நேரு, காமராஜா், கருணாநிதி, பெரியாா் ஈவெரா, எம்ஜிஆா், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், கலைவாணா் என்எஸ்கே, இயக்குநா் பாலச்சந்தா், நாகேஷ், இளையராஜா ஆகியோரின் ஓவியங்களை வரைந்த சூழல் மற்றும் அவற்றை வரையும்போது ஏற்பட்ட அனுபவங்களை எடுத்துரைத்தாா். அத்துடன், திருப்பதி ஏழுமலையான் கோயில், திருவண்ணாமலை, தஞ்சாவூா் பெரியகோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோபுரங்களை வரைந்த விதம் மற்றும் அனுபவங்கள் குறித்து விளக்கினாா். மேலும், திரைத் துறை வாழ்வு குறித்தும் வாசகா்களிடம் கலந்துரையாடினாா். தொடா்ந்து, புத்தகங்கள் வாங்கிய வாசகா்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டாா்.